முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பா கைதானது அவப்பெயர் தான்: அத்வானி

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

நாக்பூர்,அக்.19 - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டதால் பாரதிய ஜனதா தலைமைக்கு கொஞ்சம் அவப்பெயர்தான் என்று எல்.கே. அத்வானி ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா இருந்தபோது நிலப்பேர ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி,ரத யாத்திரையாக நாக்பூர் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களின் சரமாரியான கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளித்தார். கர்நாடக மாநிலத்தில் பா.ஜ. முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது பற்றியும் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அத்வானி, எடியூரப்பா கைது செய்யப்பட்டது கட்சி தலைமைக்கு கொஞ்சம் அவப்பெயர்தான். இதையெல்லாம் நாங்கள் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக இருக்கும்படி எடியூரப்பாவை எச்சரித்தோம் என்றும் அத்வானி கூறினார். எடியூரப்பா விசயத்தை முன் உதாரணமாக கொண்டு கட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அத்வானி உஷார் படுத்தினார். 

வெளிநாடுகளில் கறுப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் அதை வெளிக்கொணர நடவடிக்கை குறித்தும் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அத்வானி, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்தபோது வெளிநாடுகளில் குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அப்போது சட்ட விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் தகவல்களை பரிமாறிக்கொள்ள சுவிட்சர்லாந்து மறுத்துவிட்டது. தற்போது விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா,ரஷ்யா மற்றும் ஐரோப்பா நாடுகள் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஜெர்மனி நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அதை சமாளிக்க அந்த நாட்டு பணக்காரர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் கறுப்புப்பணத்தை பதுக்கிவைத்திருந்தவர்களின் பட்டியலை கேட்டு பெற்றது. பட்டியலில் 2000 பேர் இருந்தனர். அவர்களில் 500 பேர் மட்டும் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர்கள். மீதிப்பேர் பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் அத்வானி சூசகமாக தெரிவித்தார். பட்டியலில் உள்ள பெயர்களை தர தயார் என்று ஜெர்மன் அறிவித்தது. இதர நாடுகள் பெயர்களை கேட்டு தெரிந்துகொண்டது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசோ கேட்கவில்லை என்று அத்வானி குற்றஞ்சாட்டினார். சுவிட்சர்லாந்து நாட்டில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாயை இந்திய பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கலாம். கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு பதில் அளித்த மன்மோகன் சிங், கறுப்புப்பணத்தை கொண்டுவர கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்னிடம் உறுதி அளித்தார்.  பாராளுமன்றத்திலும் உறுதி அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கறுப்புப்பணத்தை 100 நாட்களில் வெளிக்கொண்டு வருவோம் என்றும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 700 நாட்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அத்வானி கிண்டலாக மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்