2 ஜி ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. தன் கடமையை செய்கிறது-பிரணாப்முகர்ஜி

Image Unavailable

கொல்கத்தா, நவ. - 21 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சட்டப்படி தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை சி.பி.ஐ. செய்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கமளித்துள்ளார். இது குறித்து கொல்கத்தாவில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பாரதீய ஜனதா கட்சி பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சட்டப்படி தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சி.பி.ஐ. அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை என்று விளக்கமளித்தார் பிரணாப் முகர்ஜி.  ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் பற்றி இந்த உலகத்திற்கே தெரியும். இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ஆ. ராசா உட்பட 17 பேர் தற்போது திகார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி லஞ்சப் பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வியின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழி எம்.பியும் அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இதுவரை நான்கு முறை ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. 5 வது முறையாக தற்போது டெல்லி ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த விசாரணை டிசம்பர் 1 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி(பா.ஜ.க) ஆட்சியின் போது தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜனின் பதவி காலத்திலும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதை அடுத்து அது தொடர்பாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மறைந்த பிரமோத் மகாஜன் தலைமையிலான தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் செயலாளராக இருந்தவர் ஷியாமல் கோஷ். இவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.  மற்றும் பி.எஸ்.என்.எல். குப்தா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்ட போதுதான் பிரணாப் முகர்ஜி மேற்கண்டவாறு பதிலளித்தார். சி.பி.ஐ. தன் கடமையை செய்கிறது. அதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூலாக சொன்னார் பிரணாப் முகர்ஜி. எது எப்படியோ, நாளை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த பிரச்சினை வெடிக்கப் போவது உறுதி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ