முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா தீ விபத்தில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,டிச.- 11- கொல்கத்தா தனியார் மருத்துவ மனை ஒன்றில் நேற்று முன்தினம் ஏற்பட்ட  தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இது வரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் 190 படுக்கைகள் கொண்ட  சென்ட்ரலைஸ்டு ஏ.சி. வசதி கொண்ட 7 மாடிகளை கொண்ட ஏ.எம்.ஆர்.ஐ. என்ற பல நோக்கு தனியார் மருத்துவ மனையில் நேற்று காலை திடீர் என்று  தீப்பிடித்தது. இதில் தீயில் கருகியும் மூச்சு திணறியும் 70 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை நேற்று 90 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் நோயாளிகள்.இந்த சம்பவம் தொடர்பாக இந்த மருத்துவ மனையின்  இயக்குனர்கள் குழு தலைவர் எஸ்.கே.மோடி உள்ளிட்ட 6 முக்கிய நிர்வாகிகளை போலீசார்  கைது செய்துள்ளனர் என்று  மேற்கு வங்க மாநில தீ அணைப்புத் துறை மற்றும்  இயற்கை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஜாவீத் கான் கூறினார்.கும்பலாக மனிதர்கள் பலியாக காரணமாக இருந்தது, அலட்சியமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மேற்கு வங்க மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி  அறிவித்ததை அடுத்து இந்த கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர். இந்த  தீ விபத்தில் அகில இந்திய  காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் அஜோய் கோஷல், முன்னாள் எம்.எல்.ஏ.  சிசீர் சென், ஆகியோரும்  சில வங்காளதேசத்தவர்களும் பலியானார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ மனையில் தீப்பிடித்ததை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்து மருத்துவமனைக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை  செக்யூரிட்டிகள் விரட்டி அடித்து விட்டனர். அதற்குள் அந்த தீ மருத்துவ மனை முழுவதையும் சூழ்ந்து கொண்டது.
நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு பிடித்த தீ பற்றி தகவல்  லேக் போலீஸ் நிலையத்திற்கு அதிகாலை 4.10 மணிக்குத்தான் தெரிவிக்கப்பட்டது.
பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு  அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிலரது முகங்கள்  அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி போயிருப்பதால்  அவர்கள் யார்  என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று போலீசார்  தெரிவித்தனர்.
சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியும் அடையாளம் கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மருத்துவமனையின் தலைவர் எஸ்.கே.தோடி மற்றும் நிர்வாகிகள்  ஆர்.எஸ். கோயங்கா, ரவி கோயங்கா, மணீஷ் கோயங்கா, பிரசாந்த் கோயங்கா, தயானந்த அகர்வால் ஆகியோரும்  கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்