முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவுக்கு பிரதமரை கொண்டுவர எதிர்க்கட்சிகள் முழுஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 12 - லோக்பால் மசோதாவுக்கு கீழ் பிரதமர் மற்றும் சி.மற்றும் டி.பிரிவு அரசு ஊழியர்களை கொண்டு வர வேண்டும் என்ற அண்ணா ஹசாரேயின் கோரிக்கைக்கு ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. லோக்பால் வரைவு மசோதாவுக்கான விதிமுறைகளை பாராளுமன்ற குழு தயாரித்து முடிக்கும் நிலையில் உள்ளது. இதில் பிரதமர், கீழ்நிலை அரசு ஊழியர்கள் ஆகியோர்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. அதனால் பாராளுமன்ற குழு தயாரித்துள்ள லோக்பால் மசோதா விதிமுறைகள் பலமில்லாததாக இருக்கிறது. லோக்பால் மசோதாவுக்கு கீழ் பிரதமரையும் கீழ்மட்ட அரசு ஊழியர்களையும் கொண்டுவர வேண்டும் என்று கோரி பிரபல காந்தீயவாதி அண்ணா ஹசாரே நேற்று மூன்றாவது முறையாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுகையில் அண்ணா ஹசாரேயின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ஒரு சில விஷயங்களில் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளும்படியும் அண்ணா ஹசாரேயின் குழுவினர்களை அவர்கள் கேட்டுக்கொண்டனர். கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள், ஹசாரேயின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றிருக்கு ஆதரவு தெரிவித்தனர். வலது கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் பேசுகையில் அண்ணா குழுவினர் கூறும் கருத்துக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஊழல்காரர்கள் என்று முத்திரை குத்த வேண்டாம் என்று குழுவினர்களை கேட்டுக்கொண்டார். அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் லோக்பால் குறித்த விவாதத்தில் பாரதிய ஜனதா, இடது கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், தெலுங்குதேசம், பிஜூஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். பேசிய தலைவர்களில் பெரும்பாலானோர், லோக்பால் மசோதாவுக்கு கீழ் பிரதமர்,கீழ்நிலை அரசு ஊழியர்கள், சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு பிரிவை கொண்டு வர வேண்டும் என்ற ஹசாரேயின் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மேல் கோர்ட்டுகளை லோக்பால் மசோதாவுக்குள் கொண்டுவர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் நடக்கும் ஊழலை தடுக்க தனி அமைப்பு உருவாக்கலாம் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்தனர். அண்ணா குழுவினர் கூறிய அனைத்தையும் ஏற்க வேண்டும் என்று அந்த குழுவினர் கருதக்கூடாது. சில விஷயங்களில் அண்ணா குழுவினர் நீக்குப்போக்குடன் நடந்து விட்டுக்கொடுக்க வேண்டும்.உலகம் என்பது வெறும் 10 பேர்களை கொண்டது மட்டுமல்ல.  இந்தியாவில் 120 கோடி பேர் உள்ளனர். அறிவாளிகளுக்கு பஞ்சம் இல்லை. மற்றவர்கள் கூறும் சில கருத்துக்களையும் ஹசாரே காது கொடுத்து கேட்டு அதை பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏ.பி. பரதன் பேசுகையில் மேலும் கூறினார். சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் பேசுகையில் இதே கருத்தை தெரிவித்தார். அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று யாதவ் குற்றஞ்சாட்டி பேசினார். பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி பேசுகையில், லோக்பால் மசோதா தொடர்பாக பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை பாராளுமன்ற குழு மதிக்கவில்லை என்றார். பலமான லோக்பால் மசோதா விஷயத்தில் பாரதிய ஜனதாவுக்கு மாறுபட்ட கருத்து இல்லை என்றும் ஜெட்லி கூறினார். அரசில் உள்ள அனைவரும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று ஜெட்லி மேலும் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்