முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரயோஜன மில்லாத மசோதா நிறைவேறியது: பிரசாந்த் பூஷன்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,டிச. 29 - பாராளுமன்ற லோக்சபையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா குறித்து அன்னா ஹசாரே குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து கூறிய பிரசாந்த் பூஷன், இது ஒரு பலனற்ற மசோதா என்று கூறியிருக்கிறார். 

பாராளுமன்ற லோக்சபையில் பல மணி நேர விவாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ராஜ்யசபையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் ராஜ்யசபையில் அரசுக்கு போதுமான மெஜாரிட்டி இல்லை. இதனால் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில் லோக்சபையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா பிரயோஜனமில்லாத மசோதா என்று அன்னா ஹசாரே குழுவினர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார். இது குறித்து பூஷன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

லோக்சபையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது ஒரு பலனற்ற மசோதா. இந்த மசோதாவை மக்கள் கேட்கவில்லை. அதனால்தான் எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறோம். ராஜ்யசபையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். காரணம், இது மிக மிக பலவீனமான மசோதா. லோக்பால் அமைப்புக்கு இந்த மசோதா எந்த அதிகாரத்தையும் அளிக்கவில்லை. மேலும் லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐயும் கொண்டு வரப்படவில்லை. இவ்வாறு பிரசாந்த் பூஷன் கூறினார். அப்போது அவரிடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரசை எதிர்க்கப் போவது போல மற்ற கட்சிகளையும் எதிர்ப்பீர்களா? என்று கேட்ட போது அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. மற்ற கட்சிகளின் நிலையை பார்ப்போம். பிறகு எதிர்ப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்வோம் என்றார் பிரசாந்த்பூஷன். 

உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக ஏற்கனவே அன்னா ஹசாரே அறிவித்தது நினைவிருக்கலாம். அதனால்தான் இந்த கேள்வி பூஷனிடம் கேட்கப்பட்டது. ராம்லீலா மைதானத்தில் குறைந்த அளவுதான் ஆட்கள் வந்தார்களே? என்று கேட்ட போது, மற்றவர்கள் சொல்வது போல் இல்லை என்று பதிலளித்த பூஷன், பிற்பகலில் 8 ஆயிரம் பேர் மும்பையில் குவிந்ததை சுட்டிக் காட்டினார். எங்களுக்கு ஆதரவு குறைந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். மக்கள் இன்னும் எங்களை ஆதரிக்கிறார்கள். எங்களுடன் இருக்கிறார்கள் என்றும் பூஷன் குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்