முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் காப்பீடு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.24 - தமிழக முதல்வர் ஜெயலலிதா புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, மருத்துவகாப்பீடு திட்டத்தை கோவை மாவட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தாமோதரன் ஆகியோர் அறிமுகபடுத்தி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். இது குறித்தவிபரம் வருமாறு: கோவையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கும் பணியை  வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரனும்,   வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தொடங்கி வைத்தனர்.  

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரனும், வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை வழங்கி இப்பணியை தொடங்கி வைத்தார்கள்.   கோவை மாநகர மேயர் செ.ம.வேலுச்சாமி, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.துரைசாமி (எ) சேலஞ்சர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இவ்விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் பேசியதாவது:-​        தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற வகையில் தமிழகத்தில் 1.34 கோடி குடும்பங்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.  கோவை மாவட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் பணி இன்று (நேற்று) தொடங்கப்படுகிறது.  வருட வருமானம் ரூ.72000-​க்குள் உள்ளவர்களுக்கு திட்டத்தின் மூலம் மருத்துவமனைகளில்  1116 நோய்களுக்கு சிகிச்சை பெறலாம்.  கோவையில் 14 மருத்துவமனைகள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் வரும் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.  ஏழை எளிய மக்களின் சிரமத்தை போக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் நோய்களை கனிவுடன் கேட்டு அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும்.  இத்திட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள தொலைபேசி எண்ணை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  அடையாள அட்டை எப்போது வழங்கப்படும் என்ற விபரத்தினை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்று பேசினார்.   

இவ்விழாவில் வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-                 ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயரத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  ஏழை எளிய மக்களின் நோய்களை தீர்க்க கூடிய வகையில் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் 1116 வகையான நோய்களுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 23 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்காப்பீட்டுத் திட்டத்தில் குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் வீதம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டு வருவாய் ரூ.72000​க்கு கீழ் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் சிறப்பான திட்டமாகும். இதுபோன்ற சிறப்பான திட்டங்களை கொண்டுவந்த  ஜெயலலிதாவுக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.  

இவ்விழாவில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.முத்துக்கருப்பண்ணச்சாமி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) முஸ்தபா கமால் பாட்சா, தனி துணை ஆட்சியர் (சிறப்பு அமலாக்கத்திட்டங்கள்) குணசேகரன்,  மண்டல குழு தலைவர் ஆதிநாராயணன், இணை இயக்குநர் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர் சுகுமாரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், யுனைடெட் இண்டியா இன்சூரன்ஸ் மண்டல மேலாளர் பரமசிவம், முதுநிலை மண்டல மேலாளர் அசோக்குமார்,  விரிவான காப்பீட்டுத் திட்ட கோவை மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.கிர்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்