முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருமல் மருந்து என நினைத்து விஷமருந்தை குடித்த மாயாவதி கட்சி எம்.எல்.ஏ

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, பிப்.- 3 - இருமல் மருந்து என நினைத்து விஷ மருந்தை குடித்த  மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியல்  அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் இம்மாதம் 8 ம் தேதி தொடங்கி  மார்ச் 3 ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்த தேர்தலில்  ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலரும் போட்டியிட்டு உள்ளனர்.  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உ.பி. முதல்வருமான மாயாவதி ஆட்சியில் அங்கம் வகித்திருந்த பல அமைச்சர்கள் ஊழல் புகார்கள் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ்  கட்சியை சேர்ந்த சிலருக்கு தேர்தலில் டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவ்வாறு தேர்தல் டிக்கெட் கிடைக்காத ஒரு எம்.எல்.ஏ. சமீபத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இப்போது  உன்னாவ் மாவட்டத்தில்  ஹாசன்கஞ்ச்  தொகுதியில் தற்போது பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.வாக இருக்கும்  ராதே லால் ரவாத் என்பவர்  வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இதே  தொகுதியில் இதே கட்சியை  சேர்ந்த வேறு ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த ரவாத் எம்.எல்.ஏ.  விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றதாக தகவல்கள் கிடைத்தன. இதை அடுத்து அவர்  லக்னோவில் உள்ள சத்ரபதி சாகுதி மகராஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ மனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் தேர்தல் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் இருமல் மருந்து என நினைத்து விஷ மருந்தை தவறுதலாக குடித்துள்ளதாகவும்  போலீசாரும் டாக்டர்களும் கூறியுள்ளனர்.  இந்த சம்பவம் உன்னாவ் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது லோக் ஆயுக்தா நீதிமன்றங்களில் ஏராளமான புகார்கள் குவிந்து வருவதாகவும் லக்னோவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்