முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பேன்: சரிதா

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக்.27 - உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பேன் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடுவர் தனக்கு பாதகமாக நடந்துகொண்டதாகக்கூறி பதக்கத்தை உதறிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச குத்துச்சண்டை சங்கம். இதனால் அடுத்த மாதம் 19-ம் தேதி தென் கொரியாவில் தொடங்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரிதா தேவி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சரிதா தேவி கூறியிருப்பதாவது: சர்வதேச குத்துச்சண்டை சங்கம் எனக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர்கள் எனது கடிதத்தை சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கு அனுப்புவார்கள். கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை இப்போது தெரிவிக்க முடியாது. தடை விவகாரத்தில் சுமூகத் தீர்வு எட்டப்படும் என நம்புகிறேன். இந்த மாதத்துக்குள் என் மீதான தடை நீக்கப்படுமானால் நான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும். நிச்சயம் அது நடக்கும் என நம்புகிறேன் என்றார்.

சரிதா தேவிக்கு மட்டுமின்றி, இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளர் மூவருக்கும், இந்திய விளையாட்டு குழு தலைவர் சுமேரிவாலாவுக்கும் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் ஆலோசனை நடத்தவுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்