Idhayam Matrimony

மயிலாடுதுறையில் அரசு விழா: ரூ.113.51 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பணிகள் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 16 ஜூலை 2025      தமிழகம்
CM--1--2025-07-16

மயிலாடுதுறை, மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 113 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 271 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு வழங்கினார். 

அவதூறுகளைப் பரப்ப....

பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “நேற்று (நேற்று முன்தினம்) சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை தொடங்கி வைத்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் என்று ஆங்காங்கு முகாம்கள் அமைத்து 46 சேவைகளை வழங்குகிறோம். இந்தத் திட்டத்தை அறிவித்தவுடன், இதை பார்த்து பயந்து போய் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்தத் திட்டத்தைப் பற்றி அவதூறுகளைப் பரப்பத் தொடங்கி இருக்கிறார். அவரே போதும் - இந்தத் திட்டத்தில் எத்தனை சேவை இருக்கிறது - என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் விமர்சனம் என்கின்ற பெயரில், நமக்கு விளம்பரத்தை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். அதற்காக நன்றி.

தீர்வு கண்டிருக்கிறோம்...

ஆனால், இந்தத் திட்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார். “தேர்தலுக்கு முன்பே ஊர் ஊராகச் சென்று ஒரு பெட்ஷீட்டை போட்டு, உட்கார்ந்து மனு வாங்கினாரே ஸ்டாலின் அதெல்லாம் என்னானது?” என்று அதிமேதாவி மாதிரி பேசுகிறார். பெட்ஷீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்செல் ஷீட்களாக மாற்றி, ஒர்க் ஷீட்டாக மாற்றி தீர்வு கண்டிருக்கிறோம்.

வீடு, வீடாக செல்கிறோம்... 

அது தெரியாமல் நான்கு வருடமாக குடும்பத்தோடு ஸ்டாலின் இருந்தார் என்று சொல்கிறார். என் குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டு மக்கள் தான் என்றும் அவர்களோடுதான் இருப்பேன், இருப்பேன், இருக்கிறேன், இருந்தே தீருவேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. உங்களுடைய ஸ்டாலின் பொறுத்தவரைக்கும், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்திற்காக வீடு, வீடாக செல்கிறோம் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்திலேயே விசாரித்து பார்க்கட்டும். கட்சி பேதம் பார்க்காமல், தமிழ்நாட்டு மக்களை தன் குடும்பமாக நினைக்கும் ஆட்சிதான், இந்த ஸ்டாலின் ஆட்சி.

பெண்களுக்கான திட்டம்... 

மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களும், அ.தி.மு.க. குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கும் சென்றடைகிறது. மறுக்க முடியுமா? மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை சரியாக வங்கி கணக்கில் விழுகிறது. தேதி மாறாமல், நாள் தவறாமல் சரியாக வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, பேருந்தில் கட்டணமில்லாத நம்முடைய விடியல் பயணம் மூலமாக மாதம் 800 ரூபாய்க்கு மேல் மகளிரால் சேமிக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். இந்த இரண்டு திட்டமும் பெண்களின் பொருளாதார - சமூக விடுதலைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

லேப் டாப் திட்டம்...

திராவிட மாடல் அரசின் நான்காண்டு ஆட்சியில், இதுபோல பல திட்டங்களின் பயன்களை என்னால் சொல்ல முடியும். பழனிசாமி தன்னுடைய நான்காண்டு ஆட்சியில் என்ன செய்தார்? இதே மயிலாடுதுறையில், நாம் சிலை அமைத்திருக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலான ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை 2018-ம் ஆண்டோடு நிறுத்தியவர்தான் பழனிசாமி. மாணவர்களுக்கான லேப் டாப் திட்டத்தை நிறுத்தியவரும் அவர்தான். அவர் எனக்கு டாட்டா - பை-பை சொல்கிறாராம்.

நிரந்தரமாக குட்பை... 

‘பத்து தோல்வி பழனிசாமி..’. 2019-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு டாட்டா - பை-பை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்லப் போகிறார்கள். இனி மக்கள் ஒருபோதும் உங்களை நம்பப் போவதில்லை. அட… ஏன் உங்கள் கட்சிக்காரர்களே தேர்தல் களத்தில் உங்களை நம்பத் தயாராக இல்லை. ஒரு திரைப்பட காமெடியில் வரும் - “அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” அதுபோல அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

நீங்கள்தான் ஏமாந்து... 

மக்கள் ஏமாறவில்லை, பா.ஜ.க.வை நம்பி நீங்கள்தான் ஏமாந்து போயிருக்கிறீர்கள். உங்கள் சுயநலத்திற்காக, உங்கள் குடும்பத்தினரை ரெய்டிலிருந்து காப்பாற்றுவதற்காக அ.தி.மு.க.வையே டெல்லிக்குச் சென்று அமித்ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டு வந்திருக்கிறீர்கள். மூன்று கார்... நான்கு கார் என்று மாறி அமித்ஷா வீட்டுக் கதவை தட்டிய கதையைப் பற்றி தம்பி உதயநிதி தான் முதன்முதலில் பேசினார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் - “அமித்ஷா-வின் வீட்டுக் கதவை தட்டினால் என்ன தப்பு?” என்று வெட்கமில்லாமல் கேட்கிறீர்கள்? யாருக்காக தட்டினீர்கள்? உங்கள் குடும்பத்தை ரெய்டிலிருந்து காப்பாற்ற – உங்கள் கட்சியையே அடமானம் வைக்கத்தானே தட்டினீர்கள்?

பாதுகாப்பாக இருக்கும்... 

மக்களைப் பொறுத்தவரைக்கும், “ஸ்டாலின் கையில் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் – சுயநலத்திற்காக எந்த அந்நிய சக்தியையும் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்குள் விடமாட்டார், தடுத்து நிறுத்துவார்” என்று நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்கள். அந்த எதிர்பார்ப்பை - நம்பிக்கையை - உண்மையாக உழைத்து இந்த நான்காண்டு காலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன். வளர்ச்சியில் முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என்று உங்கள் ஓனரான மத்திய பாஜக அரசே சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டை நாங்கள் உயர்த்தி காட்டியிருக்கிறோம்! உறுதியோடு சொல்கிறேன் - அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். திராவிட மாடல் 2.0-வும், இணையற்ற ஆட்சியாக இந்தியாவிலேயே தலைசிறந்த ஆட்சியாகதான் இருக்கும் என்று இப்போதே உறுதி அளிக்கிறேன்.

அக்கறையில்லை.... 

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காது இன்றும் அரசியல் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை. கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டதாக தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார்கள். கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு ஒன்றுமே செய்யவில்லை. கச்சத்தீவை தாரைவார்ப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்று என்று அனைவரும் அறிவர். கச்சத்தீவு பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து