முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீல நிற கண்களை கொண்டவர்கள்

மனித குலத்தில் ஒரு காலத்தில் அனைவரும் அடர் பழுப்பு நிற கண்களை உடையவர்களாகவே இருந்தனர். பின்னர் சுமார் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மரபணுவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நீல நிற அதாவது பூனை கண் தோற்றமுடைய மனிதர்கள் தோன்றினர். அண்மையில் டேனிஷ் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில், ஸ்காண்டிநேவியா, துருக்கி, ஜோர்டான், இந்தியா போன்ற பகுதிகளில் உள்ள நீல நிற கண்களை உடைய மனிதர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியிருக்கலாம் என கண்டறிந்துள்ளார். அதுவே மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி நீல நிற கண்களை உருவாக்கியுள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?

சிலருக்கு காபி இல்லை என்றால் அன்றைய தினம் அத்தனை சீக்கிரம் விடியாது. வேறு சிலருக்கோ வேலையும் ஓடாது, மூளையும் இயங்காது. ஆகவே காபி குடித்து நாளை உற்சாகமாக வைத்துக் கொள்பவர்கள் உலகம் முழுவதும் ஏராளமானோர் நிரம்பி வழிகின்றனர். அது, சரி, காபி குடித்தால் உடலுக்கு நல்லதா கெட்டதா, இதயத்தை பலப்படுத்துமா, பலவீனப்படுத்துமா இப்படி ஆயிரம் கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவது சகஜம். அத்தகைய காபி குறித்த பல்வேறு உடல்நலம் சார்ந்த கருத்துகள் நிலவி வந்த நிலையில் ஒருவர் ஒருநளைக்கு 25 கப் காபி குடித்தாலும் ஒன்றுமே ஆகாது என்கிற புதிய ஆய்வறிக்கை காபி பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  காபியில் அதிகளவு காஃபின் இருப்பதால் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து நிலவியது. திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உலகளவில் கோடிக்கணக்கானோர் தினமும் காபி அருந்தி வருகின்றனர்.  இந்நிலையில், 8,000 பேரை தேர்வு செய்து லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, தினசரி ஒரு கப், மூன்று கப், பல கப் என்று காபி அருந்துபவர்களை தரம் பிடித்து ஆய்வு மேற்கொண்டதில் யாருக்கும் காபியால் எந்த பாதிப்பும் உடலில் ஏற்படவில்லை.  இதனால், நாள் ஒன்றுக்கு 25 கப் வரை காபி அருந்தினால் கூட அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் காபி எனும் தேசிய பானம் காப்பாற்றப்பட்டுள்ளதாக குதூகலிக்கின்றனர் காபி பிரியர்கள்!

முதல் இடம்

சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முதல் இரு இடங்களை பிடித்துள்ளதாம்.  இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இடமும், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஒப்போ மற்றும் விவோ நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.

கவனம் தேவை

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்குமாம்.  சர்வதேச விஞ்ஞானிகள், 4 லட்சத்து 46 ஆயிரத்து 763 பேரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்ததில், ஸ்டீராய்டு இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதால் மாரடைப்புக்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்தில்கூட அதிக ஆபத்துகள் வரக்கூடும் என்றும், அதிக ‘டோஸ்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்தியர்களின் உடலில் சர்க்கரை நோயை அதிகரிக்க செய்யும் மரபணு

15 சதவீத இந்தியர்கள், தெற்காசியர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீன்/புரத வகை சர்க்கரை நோய் (நீரிழிவு), மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டை 1.5 மடங்கு அதிகரிப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பயனாக, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட சாத்தியம் உள்ளவர்களை உண்மையில் அவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம். இந்த மரபணு அமைப்பு குறிப்பிட்ட நபர்களின் உடலில் ஆயுள் முழுவதும் மாறாமல் இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. இதய, ரத்தக்குழாய், வளர்சிதை நோய்கள் ஏற்படும் குடும்ப வரலாறு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை உடல் நல நடவடிக்கை எடுப்பதற்கும், நோயை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உலகிலேயே முதன் முதலாக அனைத்து இடங்களிலும் தங்கம் ஜொலிக்கும் ஹோட்டல் எது தெரியுமா?

அந்த ஹோட்டலில் எங்கு திரும்பினாலும் தங்கம் ஜொலிக்கிறது. அதன் சுவர்கள், கைப்பிடிகள், கதவுகள் அவ்வளவு ஏன் நீச்சல் குளம், பாத்டப், வாஷ்பேஷின் கூட தங்கத்தால் செய்யப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. அது இந்த ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா... வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில்தான். 5 நட்சத்திர ஹோட்டலான இதில் அனைத்து இடங்களிலும் 24 காரட் தங்கம் ஜொலிக்கிறது.  இதன் மொத்த கட்டுமான செலவு மட்டும் ரூ.1512 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...உண்மையிலேயே சொர்க்கத்துக்கு வந்து விட்டோமோ என்று எண்ணுகிற அளவுக்கு ஜொலிக்கிறது. தங்கம் பதிக்கப்பட்ட உலகின் முதல் ஹோட்டல் என்ற பெருமையையும் இந்த ஹோட்டல் பெற்றுள்ளது. உலகமே கொரோனா கட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழில் வீழ்ச்சி அடைந்து விட்டது என்று கதறிக் கொண்டிருந்த 2020 ஆண்டில் ஜூலை மாதம் தான் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது என்பது ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்