முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மர்மங்கள் நிறைந்த அதிசய கிணறு

நூறாண்டுகள் பழமையான மர்மங்கள் நிறைந்த அதிசய ஊற்று கிணறு ஒன்று உள்ளது. எங்கே.. இந்தியாவிலா என்றால்.. அதை பற்றி கேட்கவே வேண்டாம்.. பல நூறு ஆண்டுகள் பழமையான குளங்கள், கிணறுகள் போன்றவற்றுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை.. இது அமைந்துள்ளது பிரான்சில். அங்குள்ள Burgundy என்ற பிராந்தியத்தில் அமைந்துள்ள இது Fosse Dionne spring என பிரபலமாக அறியப்பட்டுள்ளது. கடந்த 1700 களில் இதை சுற்றிலும் பொது குளியலறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் விநாடிக்கு 311 லிட்டர் வெளியேறுகிறது. சீசன் நேரங்களில் இது 3 ஆயிரம் லிட்டராகவும் அதிகரிக்கும். ரோமானியர்களால் குடிநீராகவும், செல்டியர்களால் புனித நீராகவும் இது கருதப்பட்டு வந்தது. பூமிக்கு அடியில் மிகவும் ஆழமாகவும், நீண்டு செல்லும் சுரங்க பாதைகளையும் கொண்டதாக இதில் எங்கிருந்து நீர் ஊற்று வருகிறது என்பது கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது. உள்ளே சென்றவர்கள் யாரும் திரும்ப வருவதில்லை என்ற வதந்தி பரவியதையடுத்து அதற்குள் டைவர்கள் குதிக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் இதன் மர்மம் நீடித்தே வந்துள்ளது.  கடந்த ஆண்டு தொழில்முறை டைவர் ஒருவர் முறையான அனுமதி பெற்று அதன் உள்பகுதிகளுக்கு சென்று படம் பிடித்து திரும்பினார். இருந்த போதிலும் அவராலும் நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப் பெரிய அரண்மனை அளவுக்கு பூமிக்கு அடியில் உள்ள நீர் சுரங்கத்தில் அவர் படம் பிடிப்பு நடத்திய காட்சிகள் உலகம் முழுவதும் பரவி இந்த ஊற்று நீர் கிணற்றுக்கு மேலும் விளம்பரத்தை தேடி தந்துள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யும் நவீன மின்சார கார்

-கார்பன் வெளிப்பாடு, சுற்றுச்சூழல் மாசு தாக்கத்தால் பருவ நிலை மாறுபாடு என ஏகப்பட்ட பிரச்னைகளை இன்றைய பூமி சந்தித்து வருகிறது. இதை மாற்றுவதற்காக உலக நாடுகள் பலவும் எரிபொருள் வாகனத்திலிருந்து மின் வாகனத்தை நோக்கி மாறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் கடந்தாண்டு டீசல் வாகனங்களின் விற்பனையை மின் வாகனங்களின் விற்பனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யக் கூடிய காரை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.தற்போதைய கார்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 400 கிமீ வரை மட்டுமே ஓட்டி செல்லலாம். இந்த சூழலில் தான் ஜெர்மன் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ செல்லும் வரையிலான கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. VISION EQXX என்ற மாடலில் இதை அறிமுகம் செய்துள்ளது.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மின்னணு கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த கார் மற்ற கார்களை விட எடை குறைந்த காராகும். மேலும் இதன் கூரை சோலார் பேனலால் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 25 கிமீ வரை செல்லலாம் என்றும் சொல்லப்படுகிறது.காருக்குள் கண்ணாடி திரையில் ஹோலோ கிராம் இமேஜிங், ஜிபிஎஸ் டிராக்கிங் என எக்கச்சக்க வசதிகள் உள்ளன. மேலும் வேகத்துக்கும் குறைவிருக்காது என சொல்லப்படுகிறது. இனி புதிய எதிர்காலத்துக்கான நவீன வாகனமாக இது அமையும் என எதிர்பார்க்கலாம். -

பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

பாலூட்டிகளை போல அல்லாமல், பெரும்பாலான பறவைகளுக்கு சிறுநீர் பைகள் கிடையாது. கழிவுகளை வெளியேற்ற சிறுநீரை வெளியேற்றுவதை காட்டிலும் குழம்பு வடிவிலான எச்சத்தை அவை கழிவாக வெளியேற்றி விடுகின்றன. அதே நேரத்தில் தீக்கோழிகள் மற்ற பறவைகளிடமிருந்து சற்றே மாறுபடுகின்றன. அவைகளுக்கும் சிறு நீர் பைகள் இல்லை என்ற போதிலும், பாலூட்டி விலங்கினங்களைப் போலவே தீக்கோழியும் சிறுநீரையும், எச்சத்தையும் முற்றிலும் தனித்தனியாக பிரித்து வெளியேற்றுகின்றன என்பது ஆச்சரியம் தானே..

37 ஆயிரம் இலவச அறுவை சிகிச்சை செய்து அசத்திய டாக்டர்

37 ஆயிரம் இலவச அறுவை சிகிச்சை செய்து அசத்திய டாக்டர் யார் தெரியுமா..அவர் எங்கிருக்கிறார் தெரியுமா.. அவர் இந்தியாவில் தான் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புனித நகரான வாரணாசியைச் சேர்ந்தவர்தான் டாக்டர் சுபோத் குமார் சிங். இவர் அப்படி என்ன சாதித்து விட்டார். இவரது தந்தை ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். எதிர்பாராத விதமாக அவருக்கு வேலை போகவே சுபோத்தும் அவரது சகோதரர்களும் மெழுகுவர்த்தி, சோப் உள்ளிட்டவற்றை தயார் செய்து கடை கடையாக சென்று விற்று குடும்பத்தை காப்பாற்றினர். இந்த கடினமான சூழலுக்கு மத்தியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். சுபோத். அது மட்டுமல்ல அவர் தனது தொழிலை தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டும் உதவாமல், சமூகத்துக்கும் உதவும் வகையில் அமைத்துக் கொண்டார். இதன் மூலம் மேல் அன்ன பிளவு என்ற கோளாறால் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் அது போன்ற 37 ஆயிரம் அறுவை சிகிச்சைகளை செய்து ஏழை குழந்தைகளுக்கு வாழ்வளித்துள்ளார். தற்போது சுற்று வட்டாரம் மட்டுமின்றி நாடு முழுவதும் அசல் ஹீரோவாக டாக்டர் சுபோத் குமார் சிங் பாராட்டப்படுகிறார். அவருக்கு பாராட்டுகள குவிந்து வருகின்றன.

எரிமலையில் கொடி

இந்தோனேஷியாவில் புகைந்து கொண்டிருக்கும் டுகோனு எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் எரிமலையில் தேசிய கொடியை பறக்க செய்தும், அதனை வீடியோ பதிவு செய்தும் சாதனை படைத்திருக்கிறார்.  உள்ளூர் மக்களின் உதவியோடு சாதனை படைத்த அவர், இந்த பயணம் மனநிறைவை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!