திருவாரூர் ஆழித்தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து உற்சாகம்

வியாழக்கிழமை, 25 மார்ச் 2021      ஆன்மிகம்
Thiruvarur-Alitterottam-2021-03-25

திருவாரூரில் தியாகராஜசுவாமி கோவிலில் நேற்று 96 அடி உயர ஆழித்தேரோட்டம் தொடங்கியது. பக்தர்களின் ‘தியாகேசா, ஆரூரா’ பக்தி கோ‌ஷம் விண்ணை தொட்டது.

ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே என திருநாவுக்கரசரும், தேராரூம் நெடுவீதி திருவாரூர் என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் கோவில் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் சைவ சமயத்திற்கே பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பது ஆகும். பஞ்ச பூத தலங்களுல் பூமிக்குரிய தலமாக விளங்கும் இக்கோயில் சனீஸ்வரனும், நளனும் வணங்கி சாபம் போக்கியதன் மூலம் சர்வதோ‌ஷ பரிகாரதலமாகவும் விளங்குகிறது.

இக்கோயில் ஆழித்தேர் ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. வேத ஆகமங்கள் ஒலிக்க தேரோட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கொடி அசைக்கப்பட்டவுடன் பக்தர்கள் ஆருரா! தியாகேசா என உற்சாக குரல் எழுப்பி வடம்பிடித்து தேரினை இழுத்தனர். 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டது.ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் ஒரு கி.மீ. தூரம் என்பது குறிப்பிதக்கது. 

தேரோட்டத்தினை முன்னிட்டு கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில் இருந்து தியாகராஜர் அஜபா நடனத்துடன் நகர்வலமாக வந்து திருத்தேர் ஏறினார். முதல் தேரிலிருந்தே பக்தர்களுக்கு தியாகராஜர் காட்சி அளித்தார். முன்னதாக 5 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் பக்தர்களால் இழுத்து செல்லப்பட்டது. தியாகராஜர் ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேர்களும் இழுக்கப்பட்டது. 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்ற காட்சி பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக இருந்தது. அழகிய வண்ணதுணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பார்ப்பவர்களின் மனங்களை கவரும் வகையில் இருந்தது. 96 அடி உயரத்தில் கம்பீரமாய் அசைந்தாடி வந்த தேரினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தர்கள் தருமபுரம் ஆதீனம், திருப்புகழூர் வேளாக்குறிச்சி ஆதீனம், திருவாடுதுறை மற்றும் திருப்பனந்தாள் ஆதீனங்கள் பங்கேற்றனர். தேரானது பல்வேறு வீதிகளின் வழியாக சென்றது. 

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வழக்கமாக 3 நாட்கள் நடைபெறும். இதற்கு முதல்நாள் விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டமும், ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக இந்த 5 தேரோட்டமும் இரண்டு நாட்களாக மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு ஒரே நாளில் 5 தேரோட்டமும் நடைபெற்றது. கால விரயத்தினை தவிர்க்கும் வகையிலும் பொருளாதார சிக்கனத்தை முன்னிட்டும் ஒரே நாளில் 5 தேர்களும் இழுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்திற்கே பெரிய கோயிலாக விளங்குவதாலும் சைவ சமய மரபில் பெரிய கோயில் எனப்படுவதாலும் இக்கோயில் தேரோட்டத்தினை காண தமிழகம் முழுவதும் இருந்து சிவனடியார்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்டத்திற்கும் ஏராளமான சிவனடியார்கள் வந்திருந்தனர். இவர்கள் தியாகராஜரை தரிசித்து விட்டு தேருக்கு முன்பகுதியில் உடுக்கு மற்றும் மேளம் இசைத்து அஜபா நடனம் ஆடி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து