முக்கிய செய்திகள்

அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளில் திருத்தம்: ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளரை இனி அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் : செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      தமிழகம்
OPS-EPS 2021 12 01

Source: provided

சென்னை : அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் கமி‌ஷனின் நிபந்தனையாகும். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து அப்போது ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2-வது முறையாக நேற்று காலை 10 மணிக்கு கூடியது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுனம் அனுஷ்டித்தனர். அதன் பிறகு மறைந்த தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டனர்.

செயற்குழு கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து கட்சி விதிகளில் திருத்தம் செய்யும் சிறப்பு தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யும் விதிகளை மாற்றம் செய்யும் வகையில் அந்த சிறப்பு தீர்மானம் அமைந்து இருந்தது. சிறப்பு தீர்மானம் உட்பட பல முக்கிய தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற சிறப்பு தீர்மானம் அ.தி.மு.க செயற்குழுவில் கொண்டு வரப்பட்டது. கழக அடிப்படை உறுப்பினர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து, கழக செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, கழக சட்ட திட்ட விதிகளில் பின்வரும் திருத்தங்கள் செய்ய முன்மொழியப்பட்டது.

சிறப்பு தீர்மானம் விவரம்:

1. முன்பு இருந்த விதி

அ.தி.மு.கவில் முன்னர் இருந்த விதியின்படி பொதுக்குழு உறுப்பினர்களே கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

திருத்தப்பட்ட விதி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (கழக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2 திருத்தி அமைக்கப்படுகிறது).

2. முன்பு இருந்த விதி

அ.தி.மு.கவின் அனைத்து சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும்.

திருத்தப்பட்ட விதி

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதியை, பொதுக்குழுவால் மாற்ற முடியாது. (கழக சட்ட திட்ட விதி 43 திருத்தி அமைக்கப்படுகிறது).

3. முன்பு இருந்த விதி

அ.தி.மு.கவின் சட்டவிதிகளை தளர்ந்து அதிகாரம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருக்கு உண்டு

திருத்தப்பட்ட விதி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற விதியில் தளர்வை ஏற்படுத்துவதற்கோ, விலக்கு அளிப்பதற்கோ ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் இல்லை. (கழக சட்ட திட்ட விதி 45 திருத்தி அமைக்கப்படுகிறது).

சிறப்பு தீர்மானத்தை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், பொன்னையன், தமிழ்மகன் உசேன், தனபால் ஆகியோர் முன்மொழிந்தனர். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற சட்ட திருத்தத்திற்கு கழகப் செயற்க்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர்.

பிற தீர்மானங்கள் விவரம்:

1. எம்.ஜி.ஆர். கண்ட மகத்தான மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களை நாடு, நகரமெங்கும்; பட்டி, தொட்டியெங்கும் எழுச்சியுடன் கொண்டாட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு அழைப்பு.

2. நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 66 இடங்களையும், கழக கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும், ஆக மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெறும் வகையில் உழைத்திட்ட, கழக முன்னணியினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் பாராட்டுக்கள்; கழகத்தோடு இணைந்து தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கும், தோழமை கட்சியினருக்கும், இயன்ற வகைகளில் எல்லாம் உடன் உழைத்த, உதவிய பல்வேறு இயக்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

3. நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் தி.மு.க-வின் நேர்மையற்ற பிரச்சார முறைகளுக்குக் கண்டனம்.

4. தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கால அட்டவணை மூலம் உடனடியாகத் தெரிவிக்க வற்புறுத்தியும்; அவ்வாறு தெரிவிக்காவிடில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை.

5. தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல், தமிழ் நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்றச் செயல்கள்; கொலை, கொள்ளைகள்; வழிப்பறி சம்பவங்கள்; போலீசாருக்கே பாதுகாப்பற்ற நிலை; வணிகர்கள் மீதான தாக்குதல்கள்; பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உள்ளிட்ட அச்சமூட்டும் அடாவடி செயல்களை அறவே ஒழிக்க தி.மு.க அரசு முன்வர வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்திருக்கும் தி.மு.க அரசுக்குக் கண்டனம்.

6. மழை, வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கும்; மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட தி.மு.க அரசை வலியுறுத்தல். மழை வெள்ள பாதிப்புகளை முன் ஏற்பாடுகள் மூலம் தடுக்கத் தவறிய தி.மு.க அரசுக்குக் கண்டனம்.

7. விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் கடுமையாக உழைக்கவும்; தி.மு.க-வின் முறைகேடுகளைத் தடுக்கத் தேவையான முன் ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தல்.

8. அ.தி.மு.கவை கட்டிக் காத்து, ஒற்றுமை பேணி, எதிர்கால தேர்தல்களில் மாபெரும் வெற்றிபெற, கழக முன்னோடிகளின் கரங்களை வலுப்படுத்துவோம்.

9. நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டும், பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றியும் வெற்றி பெற்றிருக்கும் தி.மு.க-வுக்குக் கண்டனம்.

10. மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்.

11. மழை, வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டு, மக்களின் துயர் துடைக்க தி.மு.க அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தல். ஆகிய தீர்மானங்கள் அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தால் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து