முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை மறுதினம் கொடியேற்றம்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Meenakshi 2022 04 02

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நாளை மறுதினம் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் உலகப்புகழ் பெற்ற திருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 12 நாள் நடைபெறும் இந்த பெருவிழா வருகிற 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. வருகிற 12-ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ம் தேதி திக்விஜயம் நடைபெறுகிறது.  விழாவின் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான வரும் 14-ம் தேதியன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.  அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். மறுநாள் தேரோட்டம் நடக்கிறது.

இது குறித்து மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ. 200, ரூ. 500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற அடிப்படையில் கொள்ளளவிற்கேற்ப பக்தர்களை திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.  எனவே கோவில் இணையதளத்தில் (www.maduraimeenakshi.org) நாளை 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

திருக்கல்யாணம் 14-ம் தேதி காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் நடைபெறும் என்பதால், திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 9 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 500 ரூபாய் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் கோவில் வடக்கு முனீஸ்வரர் சன்னதி ஒட்டிய வழியிலும், 200 ரூபாய் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். எனவே திருக்கல்யாண கட்டணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் அவர்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் காலை 9 மணிக்குள் அமர்ந்து திருக்கல்யாணத்தை கண்டு தரிசிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!