முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் சிவசங்கரின் காரை நிறுத்தி சோதனை செய்த பறக்கும்படையினர்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024
Shiv-Shankar 2024-03-29

Source: provided

ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அமைச்சர் சிவசங்கரின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து காரில் எதுவும் இல்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் செய்தார். இதில் பங்கேற்பதற்காக அரியலூரில் இருந்து அமைச்சர் சிவசங்கர் காரில் புறப்பட்டு சென்றார். 

கார் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அருகே வேளாண்மைத் துறை உதவி பொறியாளர் மகாநதி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அதை தொடர்ந்து அந்த  வழியாக வந்த அமைச்சர் சிவசங்கரின் காரையும் பறக்கும் படையினர் நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தினார். அதில் அமைச்சர் சிவசங்கர் இருப்பதை பார்த்த அதிகாரிகள் காரை சோதனையிட வேண்டும் என்றனர். 

அதற்கு தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்றவாறு காரை விட்டு இறங்கினார். காரில் அவரது உடைகள், குடிப்பதற்கு சில தண்ணீர் பாட்டில்கள் தவிர வேறு எதுவும் இல்லை. சிறிது நேர சோதனைக்கு பின்னர் காரில் எதுவும் இல்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து