முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும் - இரா.விசுவநாதன்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

திண்டுக்கல், பிப்.21  - வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணியை மக்கள் விரட்டியடிக்க வேண்டுமென திண்டுக்கல்லில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டணிக்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இரா.விசுவநாதன் ஆவேசமாகப் பேசினார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உத்தவரின் பேரில் தமிழகம் முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அ.தி.மு.க. வினர் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசுகையில், உலகத்திலேயே மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழல் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரான ராசா பதவி விலக வேண்டுமென அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் எதிரொலியாக அவர் பதவி விலக நேரிட்டது. அதனையடுத்து அவரைக் கைது செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பலனாக அவர் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழலால் பலனடைந்தவர்களையும், பயன் பெற்றவர்களையும் கைது செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இது நிச்சயமாக வெற்றி பெறும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா மட்டும் குற்றவாளியல்ல. அவரோடு மட்டும் நடவடிக்கை நின்று விடக்கூடாது. ஏனெனில் கருணாநிதி குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர்களை ஏன் கைது செய்யவில்லை.

டாடா, ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய கம்பெனிகளும் இந்த ஊழலில் பங்கு பெற்றுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு உள்ளதால் இந்த ஊழலில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வருவதைப் பார்த்து அக்கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் தங்களது பங்கிற்கு மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில் தமிழகத்தில் தி.மு.க. ஆளப்போவது இதுவே கடைசி முறை என்பது அவர்களுக்கே தெரிந்த விஷயமாகும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணியை விரட்டியடித்து விட்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சியமைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் ராமுத்தேவர், பேரவை செயலாளர் பாரதிமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டி.செல்லச்சாமி, மாவட்ட பொருளாளர் குமாரசாமி, தொகுதி செயலாளர் மருதராஜ், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், இளைஞரணி செயலாளர் சரவணன், பாசறை செயலாளர் ஆனந்தகுமார், கவுன்சிலர்கள் பழக்கடை நாகராஜ், மோகன், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன்,  திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, மா.கம்யூ மாவட்டச் செயலாளர் பாண்டி, நகரச் செயலாளர் கல்யாணசுந்தரம், ம.தி.மு.க. மாநில இளைஞரணி அமைப்பாளர் அழகுசுந்தரம், நகரச் செயலாளர் பரசுராமன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் சந்தானம், மாவட்டச் செயலாளர் பேட்ரிக் சகாயநாத் உட்பட அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்