முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் - தேர்தல் ஆணையம் தலையிட வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.18 - அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தி வரும் ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்தை ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே உள்ள ஒரு மாத இடைவெளியிலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், சட்டம்​ஒழுங்கை பராமரிக்கின்ற ஒரே ஒரு பொறுப்புதான் மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. ஆனால், அந்தப் பொறுப்பைக்கூட நிறைவேற்ற முடியாத லாயக்கற்ற அரசாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், சட்டம்​ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் கருணாநிதியின் தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. ஆட்சி பறிபோகப் போகிறதே என்ற பயம் காரணமாக அ.தி.மு.கழக உடன்பிறப்புகள் மீதும், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மீதும் தி.மு.க.வினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று நேற்று நான் குறிப்பிட்டு இருந்தேன். அதை நிரூபிக்கும் விதமாக, பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருnullமலை பகுதியில் கழக உடன்பிறப்புகள் மீது தி.மு.க.வினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கழக உடன்பிறப்புகள் ராமு, முனுசாமி மற்றும் கங்காதரன் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதே போன்று, தி.மு.க.வினரால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில், ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 16​வது வட்டத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் குப்பன், ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட 14​வது வட்டத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர்கள் மதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் படுகாயமடைந்து சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது போன்ற பல வன்முறைச் செயல்கள் தி.மு.க.வினரால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தி.மு.க. ரவுடிக் கும்பலின் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தில் சட்டம்​ஒழுங்கு சீரழிந்து கொண்டு இருக்கின்றது. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்ட கழக உடன்பிறப்புகளையும், அரசுக்கு எதிராக வாக்களித்த மக்களையும் பழிவாங்குவதற்காகத் தான் வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி விடப்பட்டதோ என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு ரவுடிக் கும்பல் ரவுடிகளை கட்டுப்படுத்தும்; வன்முறைச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தில் ஆங்காங்கே நிலவும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இது போன்ற வன்முறைச் செயல்கள் இனி நிகழா வண்ணம் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்படி கொடூரத் தாக்குதல்களில் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அன்புச் சகோதரர்கள் ராமு, முனுசாமி, கங்காதரன், குப்பன், மதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் nullரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்