முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவிலில் தவறான சிகிச்சையால் கோமாவுக்கு போன பெண்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில், ஜூன்.16 - குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள செம்பங்கரையைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி ருக்மணி (வயது 27).  கர்ப்பிணியான இவரை உறவினர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்த்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு சென்ற இவருக்கு டாக்டர்கள் பிரசவ ஆபரேசன் செய்தனர். அப்போது அவரது உடல்நிலை மோசமானதால் ஆபரேசன் தியேட்டரில் இவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ருக்குமணியின் உடல்நிலை மோசமானது. உடனே டாக்டர்கள் ருக்குமணிக்கு கொடுக்கப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டரை சோதித்தனர். அப்போது தான் அது ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை என்பதும், நைட்ரஸ் ஆக்சைடு இருந்த சிலிண்டர் என்பது தெரியவந்தது. உடனே டாக்டர்கள் அந்த சிலிண்டரை மாற்றி விட்டு மீண்டும் ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்தனர். அதற்குள் ருக்குமணியின் உடல்நிலை கவலைக்கிடமாகி அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். 

இதை தொடர்ந்து ருக்குமணி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் கோமா நிலையில் இருந்து அவர் மீளவில்லை. 

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி ருக்குமணியின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தனர். அங்கிருந்த உயர் அதிகாரி ஒருவர் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை யாரால் தவறு நடந்தது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் பிரச்சனை மேலும் அதிகரித்தது.  

இதை அறிந்த மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டர்கள் சப்ளை செய்யும் நிறுவனத்தை அழைத்து விசாரித்தனர். அங்கிருந்த ஊழியர்கள் தான் சிலிண்டரை மாற்றி இருக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் கியாஸ் சப்ளை செய்யும் நிறுவனத்தினரோ இதை மறுத்தனர். அவர்கள் கூறும் போது இரண்டு சிலிண்டர்களுமே வேறு வேறு கலரில் இருக்கும். சிலிண்டரின் மீதும் என்ன கியாஸ்? என்பது பற்றிய குறிப்பு இருக்கும். அப்படி இருக்கையில் ஆஸ்பத்திரி ஊழியர்களே சிலிண்டரை தவறுதலாக மாற்றி இருக்க வேண்டும் என்றனர். இரு தரப்பிலும் மாறிமாறி புகார் கூறியதால் இதில் யார் தவறு செய்தார்கள் என்பது பற்றி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக அப்போதயை கலெக்டர் ராஜேந்திர ரத்னூ உத்தரவின் பேரில் மருத்துவகுழு மற்றும் காவல்துறையினர் பேரில் மருத்துவகுழு மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை அறிக்கையின் விவரம் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இச்சம்பவம் தொடர்பாக ருக்மணிக்கு ஆபரேஷன் நடத்திய குழுவில் இருந்த டாக்டர்கள் முத்து செண்பகம், எட்வர்டு ஜான்சன், மகேஸ்வரி, மருந்தாளுனர்கள் சிவகலை, எசிடோர், சண்முகசுந்தர நாயகி, நர்சுகள் அனிதா, விஜயகுமாரி ஆகிய 8 பேருக்கும் மெமோ அளித்தனர். இந்த நிலையில் அந்த 8 பேரையும் சஸ்பெண்டு செய்து மருத்துவத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony