முக்கிய செய்திகள்

இலங்கை மீது பொருளாதார தடைகோரி நடிகர் - நடிகைகள் ஊர்வலம்

புதன்கிழமை, 29 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.29 - இலங்கை மீது பொருளாதார தடை கோரி நடிகர் - நடிகைகள் ஊர்வலம் செல்ல முடிவு செய்து இருப்பதாக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூறினார்.

நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி மற்றும் நிர்வாகிகள் சத்யராஜ், மனோரமா, மயில்சாமி, குயிலி, கே.ஆர். செல்வராஜ் ஆகியோர் நேற்று சென்னை கோட்டையில் முதல்​அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் வெளியே வந்த சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

முதல்​அமைச்சர் பொறுப்பு ஏற்றதற்காக ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம். அப்போது முதல்​ அமைச்சரிடம் சில கோரிக்கைகளையும் முன் வைத்தோம். முதல்வர் பதவி ஏற்றதுமே கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இலங்கைக்கு இந்திய அரசு பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்றும் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக நன்றி தெரிவித்தோம். இந்த தீர்மானங்களை பாராளுமன்றம் மூலம் நிறைவேற்ற வலியுறுத்தி கவர்னரிடம் நடிகர் - நடிகைகள் ஊர்வலமாக சென்று மனு கொடுக்க திட்டமிட்டு உள்ளோம். பேரணியை எந்த தேதியில் நடத்துவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. நடிகர் - நடிகைகளிடம் கலந்து ஆலோசித்து தேதி முடிவு செய்யப்படும். இதனை முதல்வரிடம் தெரிவித்து உள்ளோம். கடந்த ஆட்சியில் பையனூரில் திரைப்படத்துறையினருக்கு நிலம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அங்கு 99 வருடம் லீசுக்கு வீடுகள் கட்டிக்கொள்ளலாம் என்றனர். அது சொந்த இடமாக இருந்தால் நல்லது என்று கூறி உள்ளோம். நடிகர் சங்கத்தில் உள்ள முதியவர்கள் வீடு கட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். பையனூர் ரொம்ப தூரமாக உள்ளது. எனவே அவர்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு நல்ல இடம் ஒதுக்க கேட்டுள்ளோம். மூன்றாவது முறையாக முதல்வரான ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த விருப்பப்படுகிறோம். இதனை முதல்வரிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் துறை தோறும் நிறைய ஆய்வு கூட்டங்கள் நடத்த வேண்டி இருப்பதால் பாராட்டு விழா இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனாலும் பாராட்டு விழாவை நடத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: