முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபானங்களுக்கு சேவை வரிச்சட்டத்தில் வரிவிதிக்க எதிர்ப்பு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.10 - மதுபானம், பெட்ரோலியப் பொருட்கள் போன்றவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின்கீழ் வரிவிதிப்பதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை விஷயத்தில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.3800 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரியுள்ளார்.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் மாநில நிதியமைச்சர்கள் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவர் தலைமையில், பல்வேறு மாநிலங்களின் நிதி வரிவிதிப்பு அமைச்சர்களின் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மத்திய பிரதேச நிதியமைச்சர் செய்திருந்தார். இம்மாநாட்டில் தமிழக அரசின் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

சேவைவரியில் எதிர்மறை பட்டியில் தயாரிப்பது குறித்தான மத்திய அரசின் கருத்துருவைப் பொறுத்தமட்டில், இந்நேர்வில் பல மாநில அரசுகளை சேர்ந்த செயலாளர்கள், ஆணையர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளை நாங்கள் பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். சேவைவரியில் எதிர்மறை பட்டியலை அறிமுகப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிவிதிப்பு இனங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. இந்திய அரசியல் சட்டத்தின் மத்திய பட்டியலில் வரிசை எண்.97-ல் உள்ள எஞ்சிய அதிகாரங்களைக் கொண்டு மாநில அரசுகளின் வரிவிதிப்பு வரம்பிற்குள் மத்திய அரசு பலமுறை தலையிட்டுள்ளது. இந்நேர்வில், விரிவான கலந்தாலோசிப்பிற்கு பின்னும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்-ன் வல்லுநர்களின் ஆலோசனைகளின் படியும் எங்களுடைய குறிப்பு விரைந்து அனுப்பி வைக்கப்படும்.

சென்ற கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின் கீழ் விரிவிதிப்பதற்கான கோரிக்கையின் மீது மாநில அரசுகளின் குறிப்புகள் கோரப்பட்டுள்ளது. சிறிய விநியோக சங்கிலி தொடர் கொண்ட பொருட்களில் வரி ஏய்ப்பு மிக அதிக அளவில் நடைபெறுகிறது என்பது கடந்த கால அனுபவங்களின் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம். மேலும்,  பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டால் தற்போது உள்ள வரி விகிதத்தின் அடிப்படையில் ஈட்டப்படும் வருவாயினை காத்திட மாநில அரசுகள் சரக்கு மற்றும் சேவை வரிக்கு கூடுதலாக விதிக்கப்படும் வரியானது, சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்படுத்தப்படும் வரியைவிட அதிகமாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும். இதுபோன்ற பல காரணங்களுக்காக, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின் கீழ் வரிவிதிப்பதற்கு தமிழக அரசிற்கு ஏற்புடையதல்ல. இது தொடர்பாக எங்களுடைய கருத்துக்களை அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழான இழப்பீட்டுத் தொகையை பொறுத்தமட்டில், நிலுவையில் உள்ள தொகையினை விரைந்து வழங்கிட மத்திய அரசின் நிதியமைச்சகத்திடம் அதிகாரமளிக்கப்பட்ட குழு வலியுறுத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம். பலமுறை கேட்டு கொண்டதற்கு பின்பும் தமிழ்நாட்டிற்கு வரப்பெற வேண்டிய தொகையான ரூ.3,800 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச மதிப்புக் கூட்டுவரியானது 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக அதிகரிக்கப்படவில்லை  என்ற அற்ப காரணத்தைக் காட்டி 2010-2011-ம் ஆண்டிற்கு மட்டும் ரூ.2,000 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை தொடர்பான பரிமாற்றங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான முத்திரைத் தீர்வை விதிக்க விளையும் மத்திய அரசின் கருத்துரு குறித்து மாநில அரசுகளின் கருத்தினை அதிகாரமளிக்கப்பட்ட குழு கோரியுள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே பங்குச் சந்தை தொடர்பான பரிமாற்றங்களுக்கு முத்திரைத் தீர்வை விகிதத்தை முடிவு செய்யும் முன் தமிழக அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதற்கு உட்பட்டு இக்கருத்துருவிற்கு தமிழக அரசின் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டை ஏற்று நடத்தும் நான் மீண்டும் ஒருமுறை மத்திய பிரதேச அரசின் நிதியமைச்சர் மற்றும் அவருடைய அணியினை சிறப்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்