முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவணங்கள் உள்ள பகுதிக்குத்தான் பெண் அதிகாரி சென்றார்! மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள பகுதிக்குள் யாரும் நுழைய வாய்ப்பில்லை - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மதுரையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ள வாக்குபதிவு இயந்திரம் உள்ள பகுதிக்குள் யாரும் போகவில்லை. யாரும் நுழைய வாய்ப்பு இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மதுரை பாராளுமன்ற தொகுதியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த இடத்தில் 20-ம் தேதி ஏ.ஆர்.ஒ. கீழ் பணியாற்றும் ஒரு அதிகாரி அதிகாலையில் வாக்கு பெட்டிகள் உள்ள அறைக்குப் பக்கத்தில் ஆவணங்கள் உள்ள பகுதியில் சில ஆவணங்களை பார்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இன்று காலை ( நேற்று) மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உடன் யாராவது சென்றார்களா? இவரை யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள இடத்திற்கு யாரும் போகவில்லை. ஆவணங்கள் உள்ள பகுதிக்குத்தான் அந்த பெண் அதிகாரி சென்றுள்ளார். இது குறித்து விரிவான அறிக்கையை அளித்துள்ளோம். இன்று காலை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்னிடம் வந்து சில விளக்கங்களை கேட்டுள்ளார்கள். இதனை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி விளக்கம் கேட்கப்படும்.
கட்சியினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். விளக்கம் வந்தவுடன் இது தொடர்பாக விளக்கத்தை அளிக்கிறேன். மாவட்ட தேர்தல் அதிகாரியிடமிருந்து விரிவான அறிக்கை வந்தவுடன் இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடங்களில் யாரும் போக முடியாது. ஆவணங்கள் இருக்கும் பகுதிக்குத்தான் அவர் சென்றுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதியில் துணை ராணுவத்தினர், காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பில் இருக்கும் அங்கு யாரும் நுழைய முடியாது. 24 மணி நேரமும் ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி கண்காணித்துக் கொண்டிருப்பார். தபால் வாக்குகள் எப்போதும் ஆவணங்கள் உள்ள இடத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. இதற்கு எனத் தனியாகப் பாதுகாப்பு அறையை மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்படுத்தியிருப்பார். அங்குதான் தபால் வாக்குகள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து