கட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      அரசியல்
Priyanka 2019 03 25

காங்கிரஸ் பதவியை ஏற்க விரும்ப வில்லை என்று பிரியங்கா காந்தி கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வர முடியாதபடி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக கடந்த இரண்டரை மாதமாக காங்கிரஸ் கட்சி, தலைவர் இல்லாமல் உள்ளது. இது காங்கிரஸ் நிர்வாக செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வந்தால் நீடிக்க முடியாது என்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பலரும் தலைமை பொறுப்பை ஏற்க மறுத்துள்ளனர். அதே சமயத்தில் ராகுல் காந்தியும் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறி விட்டார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால் அது முடிந்த பிறகு செயற்குழு கூட்டத்தை கூட்டலாம் என்று தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற கூட்டத் தொடர் அடுத்த வாரம் 7-ம் தேதி நிறைவு பெறுகிறது. எனவே 8-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மூன்று மூத்த தலைவர்களின் பெயரை ஓட்டெடுப்புக்கு விட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்காவை தலைவர் ஆக்கலாம் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங், சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் பதவியை ஏற்க விரும்ப வில்லை என்று பிரியங்கா கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டு தனது பெயரை தலைவர் பதவிக்கு பரிந்துரைக்க கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே தலைவர் பதவி போட்டியில் பிரியங்கா இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்களில் தலித் இனத்தைச் சேர்ந்த முகுல்வாஸ்னிக் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அது போல சுசில்குமார் ஷிண்டே, ராஜஸ்தான் முதல்- மந்திரி அசோக்கெலாட், இளம் தலைவர்கள் சச்சின் பைலட், ஜோதிர்ராஜசிந்தியா ஆகியோரது பெயரும் காங்கிரஸ் தற்காலிக தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து