முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்க சென்னையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் 10 லட்சம் குழந்தைகள் உலக சாதனை உறுதிமொழி

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 10 லட்சம் குழந்தைகள் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்க உலக சாதனை உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டுக்கான வலைதளம் மற்றும் செல்போன் ஆப்பை முதல்வர் தொடங்கி வைத்தார்.
புதிய வலைதளம் - செல்போன் ஆப்

பள்ளிக்கல்வித் துறை மற்றும் கிரீன் லைப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக சாதனை நிகழ்வாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி உறுதிமொழி ஏற்று துவக்கி வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக்கிட, தமிழ்நாடு அரசால் ஜனவரி-1, 2019 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பத்து உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக்கிட மாநில அளவிலான பிரச்சாரத்தினை துவக்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து www.plasticpollutionfreetn.org  என்ற வலைதளத்தையும், plastic pollution free tamilnadu என்ற செல்போன் செயலியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் அதற்கான மாற்றுப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவையை 2018-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

10 லட்சம் குழந்தைகள் உறுதிமொழி

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்த பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஜூன் 17-ம் தேதி விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித் துறை மற்றும் கிரீன் லைப் தொண்டு நிறுவனமும் இணைந்து பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற இயக்கத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி நேற்று உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. உறுதிமொழி

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு! நெகிழ்ச்சியான தமிழ்நாடு, மகிழ்ச்சியான தமிழ்நாடு !இன்றைய மாணவர்களாகிய நாங்கள் உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்த்து, நாளைய தமிழ்நாட்டை பசுமையாக்கக் கூடிய இந்த நெகிழி மாசில்லா தமிழ்நாடு இயக்கத்தில் சேர்ந்து, நம்மையும் நம்மை சுற்றியுள்ள அனைத்து இடங்களையும் தூய்மையாக வைப்பது மட்டுமின்றி, மனித உயிர்களுக்கு தீங்கு தரக்கூடிய இந்த நெகிழியை நம் அன்றாட வாழ்வில் இருந்து அகற்றுவதோடு, ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக்கை சரியான முறையில் அழித்து அதற்கு மாற்றாக இருக்கும் இயற்கையால் ஆன பொருட்களை பயன்படுத்தி மகிழ்ச்சியாகவும், நலமாகவும் வாழ்வோம் என்றும், தலைமுறை போற்றும் தொலைநோக்கு திட்டமாகிய பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் உளமாற உறுதி ஏற்கிறோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

குழந்தைகளுக்கு இனிப்புடன் வாழ்த்து

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு. நெகிழ்ச்சியான தமிழ்நாடு. நெகிழ்ச்சியான தமிழ்நாடு பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கப்பட்ட பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி , குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், கிரீன் லைப் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் விருகை வி.என். ரவி மற்றும் கே. பழனி, தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலம், உறுப்பினர் செயலர் சேகர், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து