முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2021      அரசியல்
Image Unavailable

வரும் 25-ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 15-வது சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

இதனிடையே  தமிழக அரசியல் களம் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.   மாவட்ட வாரியாக தொகுதிகளை தேர்வு செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது என அரசியல் கட்சிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. 

இந்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அறிவித்த நிலையில் வரும் 25-ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.  இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 

நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற 25 முதல் மார்ச் 5-ம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.  விருப்ப மனுக்களை அளிக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மார்ச் 5-ம் தேதிக்குள் பொதுத்தொகுதிகளுக்கு ரூபாய் ஐந்தாயிரமும், தனித்தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களும், மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறும் கட்சி நன்கொடையாக வங்கி வரைவோலை மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.  

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்தும், இணைக்கப்பட வேண்டிய இதர விவரங்களை விருப்ப மனுவுடன் சேர்த்து இணைத்து நன்கொடைத் தொகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வங்கி வரைவோலையாக சென்னை, சத்தியமூர்த்தி பவனில் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.  விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து