முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன: சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2021      அரசியல்
Image Unavailable

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஒருபக்கம் வெயிலால் அனல் பறக்கிறது என்றால் மறுபக்கம் தலைவர்கள் பிரச்சாரத்தாலும் அனல் பறக்கிறது.

தமிழக சட்ட சபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. பிரச்சாரம் முடிய 4 நாட்களே இருப்பதால் தலைவர்கள் மின்னல் வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாமல் தமிழகம் இம்முறை சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. அந்த வகையில் இந்த தேர்தல் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் ஒரு பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ம் தேதி துவங்கி 19-ம் தேதி முடிந்தது. 20-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. பின்னர் 22-ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பிறகு தற்போது தேர்தல் களத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். 

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில், பா.ஜ.க., பா.ம.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., வி.சி.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த இரு பிரதானக் கட்சிகளை தவிர கமல் தலைமையில் மக்கள் நீதிமய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி. தலைமையிலான அ.ம.மு.க ஆகிய கட்சிகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். இருப்பினும் போட்டி என்னவோ, அ.தி.மு.க. வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையில் தான் நிலவுகிறது.

இந்த தேர்தலையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடந்த ஒரு மாதமாகவே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். இடைவிடாது பிரச்சாரத்தால் பேசக்கூட முடியாத நிலையிலும் தற்போது அவர் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்றைய தினம் தாராபுரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்திலும் முதல்வர் பங்கேற்று பேசினார். அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நேற்றைய தினம் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். வெயில் கடுமையாக இருந்ததால் மு.க.ஸ்டாலின் கூலிங்கிளாஸ் அணிந்திருந்ததை காணமுடிந்தது. இப்படியாக மேற்கண்ட தலைவர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதே போல மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன், நாம்தமிழர் சீமான், டி.டி.வி.தினகரன் ஆகியோரும் தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். விருத்தாசலத்தில் போட்டியிடும் பிரேமலதாவும் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். ஆனால் வலுவான கூட்டணி அமையாத காரணத்தாலோ என்னவோ அவரது பேச்சைக் கேட்க அதிக அளவில் மக்கள் கூடவில்லை. இந்நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரிவாக செய்து வருகிறது. துணை ராணுவப்படையினரும் தமிழகத்தில் குவிக்கப்படுகிறார்கள். வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தலைவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். இதன் காரணமாகவும், சுட்டெரிக்கும் வெயிலாலும் தமிழகத்தில் அனல் பறக்கிறது என்று சொன்னாலும் அது மிகை ஆகாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து