முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வைகோ, திருமாவளவன் ஆதரவு - சீமான் எதிர்ப்பு

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது சம்பந்தமாக அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆலையை மூடச் சொல்லி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி மூடப்பட்டது. தற்போதும், ஆலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. தடை ஆணை நீடிக்கின்றது.

ஆயிரக்கணக்கான கோடி லாபம் ஈட்டிய ஸ்டெர்லைட் ஆலை, ஆக்சிஜன் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டு, கள்ளத்தனமாக ஆலையைத் திறப்பதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு தமிழக அரசு இடம் தரக் கூடாது.

அதே நேரத்தில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதால், தமிழ்நாடு அரசே அந்த ஆலையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்.

அதற்குத் தேவையான பொறியாளர்களை, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது, ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்கனவே பணி ஆற்றிக் கொண்டு இருக்கும் பொறியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை இயக்க அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

இன்றைய கூட்டம் ஆக்சிஜன் உற்பத்தியை விட ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான கூட்டமாக உள்ளது.

மிகவும் நெருக்கடியான காலச்சூழலில் நாம் இருக்கிறோம். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடே தவிக்கிறது. 

இப்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து விடலாம் என முடிவு செய்வது போல உள்ளது. காற்றை நச்சாக்கிய நிறுவனத்திடமே ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கோருவது முரணாக இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உடன்பாடு இல்லை என்றாலும் ஆக்சிஜன் உற்பத்திக்காக வரவேற்கிறேன்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கும் சூழலில், அந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு மட்டுமின்றி உயர்நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரத்தில், தமிழகத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பாமல் இங்குள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஆக்சிஜன் பற்றாக் குறையைப்பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான வேலைகளை தந்திரமாக அதன் உரிமையாளர்கள் செய்துவிடுவார்களோ என்ற பயம் தூத்துக்குடி மக்களிடம் இருக்கிறது.

அவர்களின் இந்த உணர்வினைப் புரிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் அடுத்த மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜிகே வாசன் கூறும்போது, உயிர்களை காக்கும் அதிமுக்கியமான தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு தமிழக அரசு அனுமதிப்பது இக்கட்டான இந்த நேரத்தில் வரவேற்கத்தக்க முடிவு என்று கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலையை பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத்திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன.

நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைக் காரணமாகக் கொண்டு மீண்டும் இயங்குவதற்கு அடித்தளமிடும் ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிகளை மொத்தமாய் முறியடிக்க வேண்டும்.

தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது அரசின் கொள்கை முடிவென அறிவித்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கிற வேதாந்தா குழுமத்தின் முன் நகர்வுகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இதற்கு மாறாக, தற்காலச் சூழலைக் காரணமாகக் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிகள் நடக்குமேயானால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும். தேவையற்றப் பதற்றமும், சட்டம் ஒழுங்குச் சிக்கலும் ஏற்படுமென எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து