ஆஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு

australia-corona

Source: provided

சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்திலேயே தீவிர நடவடிக்கைகள் மூலம் அதனை கட்டுக்குள் கொண்டு வந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. 

கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

அங்கு கடந்த மாதத்தின் பிற்பகுதியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த 3 மாகாணங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களில் மெல்ல மெல்ல வைரஸ் பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் சிட்னி நகரில் அதற்கு நேர்மாறாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தது. அங்கு ஒவ்வொரு நாளும் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

இந்தநிலையில் பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சிட்னி நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆறு வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று 262 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில் டெல்டா வகை கொரோனாவை கட்டுப்படுத்துவது உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கு சவாலாக உள்ளது. 

நாம் முயற்சி செய்து வைரஸை அழிக்க முடியும். ஆனால், பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியே முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். இதனால், நியூகாசில் உள்பட ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்டோரியா மாகாணத்தில் ஏழு நாள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து