டோக்கியோ ஒலிம்பிக் போட்டியி்ல் சாதனை: இந்தியாவுக்கு ஒரே நாளில் கிடைத்த 2 பதக்கங்கள்

indian-hockey-team-2021-08-

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி பதக்கத்தை வென்றது. இதேபோல் மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய அணியின் வெற்றிக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

நியூசி.யை வீழ்த்தியது...

சர்வதேச தரநிலையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் போராடி வென்றது. கடைசி நிமிடங்களில் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் தடுப்பு காரணமாக இந்திய அணி வெற்றியை ருசித்தது.

காலிறுதிக்கு தகுதி...

2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 1-7 என்ற கோல்கள் கணக்கில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இதன் மூலம் காலிறுதியில் தங்கள் இடத்தை உறுதி செய்துக் கொண்டது.

அரையிறுதிக்கு தகுதி...

லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ஜப்பானை எதிர்த்து விளையாடிய இந்திய அணி, 5 - 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசமாக்கியது. இதனையடுத்து ஏ பிரிவில் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது. இதனையடுத்து பி பிரிவில் மூன்றாவது இடம் பிடித்த பிரிட்டன் அணியை காலிறுதியில் எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

பெல்ஜியம் வெற்றி...

பி பிரிவில் 4 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்து, காலிறுதியில் ஸ்பெயினை தோற்கடித்த பெல்ஜியம் அணியை அரையிறுதியில் எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

ஜெர்மனி முன்னிலை... 

இதையடுத்து வெண்கலப் பதக்கத்திற்காக நேற்று நடைபெற்ற போட்டியில் ஜெர்மனியை இந்திய அணி எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

3-3 என சமநிலை... 

2-வது கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் அதாவது 17-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை அடைந்தது. ஜெர்மனி வீரர் ஃபர்க் 25-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் முறையே 27 மற்றும் 29-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர். இதனால் 2-வது கால் பகுதி ஆட்டம் முடிவில் ஸ்கோர் 3-3 என சமநிலை பெற்றது.

இந்தியா முன்னிலை...

3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 3-வது கால் பகுதி ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே, அதாவது ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ருபீந்தர் பால் சிங் கோல் அடித்தார். அதோடு அல்லாமல் 34-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால் 3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்தியா 5-3 என முன்னிலைப் பெற்றிருந்தது.

இந்தியா வெற்றி...

4-வது மற்றும் கடைசி கால் பகுதி ஆட்டம் தொடங்கியது. 48-வது நிமிடத்தில் ஜெர்மனியின் வண்ட்பெடர் கோல் அடிக்க ஸ்கோர் 5-4 என ஆனது. ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்ய, இந்திய வீரர்கள் தடுப்பதில் ஆர்வம் காட்டினர். கடைசி 7 வினாடிகள் இருக்கும்போது ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதையும் இந்திய வீரர்கள் முறியடிக்க 5-4 என இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. 

41 ஆண்டுகால... 

இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக்கில் 41 வருடத்திற்கு பிறகு இந்திய ஆடவர் அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1972 ஒலிம்பிக்கில் கடைசியாக வெண்கலம் வென்றது, 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் கடைசியாக இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் வெண்கலம் வென்று 41 ஆண்டுகால பதக்கக் கனவை நிறைவேற்றியது.

57 கிலோ பிரிவில்... 

இதே போல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று மாலை நடைபெற்ற ஆடவர் மல்யுத்தம் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.  மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் தாஹியா, நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் ஜாவுர் உகுயேவை எதிர்கொண்டார்.

தாஹியாவுக்கு வெள்ளி...

ரஷிய வீரர் சிறப்பாக விளையாடி 7-4 என்கிற புள்ளிக்கணக்கில் இந்திய வீரரைத் தோற்கடித்தார். இதையடுத்து ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 

ஒரே நாளில் 2 பதக்கங்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நேற்றைய தினம் அருமையான நாளாக அமைந்தது. ஆடவர் ஹாக்கியில் நேற்று காலை நடைபெற்ற போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. நேற்று மாலை நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒரேநாளில் இந்தியாவுக்கு நேற்று 2 பதக்கங்கள் கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலம் உள்ளிட்ட மொத்தம் 5 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 65-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து