முக்கிய செய்திகள்

திருவனந்தபுரம் சைனிக் பள்ளியில் மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதி

சனிக்கிழமை, 11 செப்டம்பர் 2021      இந்தியா
kerala-school-2021-09-11

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் சைனிக் பள்ளியில் முதல் முறையாக இந்தக் கல்வியாண்டு முதல் மாணவிகள் சேர்க்கை அனுமதிக்கப்பட்டது. 

இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த 10 மாணவிகளுக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளியின் வரவேற்பில் மாணவிகள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் மோடி, சைனிக் பள்ளியில் இனி மேல் மாணவிகளும் சேர்க்கப்படுவார்கள் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து மற்ற சைனிக் பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை தொடங்கியது.  இந்நிலையில் கழக்கூட்டம் சைனிக் பள்ளியில் முதல் முறையாகச் சேர்ந்த மாணவிகளுக்குப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தக் கல்வியாண்டில் கேரளாவிலிருந்து 7 மாணவிகள், பீகாரிலிருந்து இருவர், உ.பி.யிலிருந்து ஒருவர் என 10 மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். சைனிக் பள்ளியில் சேர்வதற்கு அனைத்து இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் பள்ளியில் சேர்க்கை நடக்கும்.

 

சைனிக் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவி பூஜா கூறுகையில், சைனிக் பள்ளியில் சேர்வதற்காகக் கடினமாகப் படித்தேன். எனது பயிற்சிக்கு எனது சகோதரரும் உதவி செய்தார். பெற்றோர்கள் ஆதரவு முக்கிய பலமாக இருந்தது. எனக்கு இடம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து