முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்து. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 9 மாவட்டங்களில் 39 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சிக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மதியம் 12 மணி நிலவரப்படி 25 முதல் 30 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு தி.மு.க, அ.தி.மு.கவினர் பெரும்பான்மையான இடங்களில் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர். மேலும், உள்ளூர் செல்வாக்குள்ள நபர்கள் பலரும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர்.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் 2,981 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள 23,998 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றுது. அதன்படி, நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்களிக்க காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு இருந்தவர்கள் மட்டும் நேற்று மாலை 5 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மொத்தத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்த மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை 9 ஆகும். மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 140. இதில் முதல்கட்டமாக நேற்று 78 ஊராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 74. முதல்கட்டமாக 39 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எண்ணிக்கை 1381. அதில் முதல் கட்டம் 755 இடங்களிலும், மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 2901. இதில் முதல்கட்டமாக 1577 ஊராட்சிகளுக்களிலும், மொத்த ஊராட்சிகளின் வார்டுகளின் எண்ணிக்கை 22,581. இதில் முதல்கட்டமாக 12,252 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்றன. 

நேற்று மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பவர்கள் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் அளித்தனர். அதன்படி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒரு வாக்கு, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஒரு வாக்கு, ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4 வாக்குகள் அளித்தனர். 4 வாக்குகள் அளிப்பதற்கு வசதியாக இளம்சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் என 4 கலரில் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. வாக்காளர்கள் 4 வாக்குச்சீட்டிலும் தனித்தனியாக சின்னங்களில் சீல் வைத்து, வாக்குப்பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

நேற்று முதல் 4 மணி நேரத்தில் 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. நேற்று 3 மணி நிலவரப்படி, வேலூர் மாவட்டத்தில் 52.32 சதவீதமும், ராணிப்பேட்டை  மாவட்டத்தில் - 49.79 சதவீதம்,  செங்கல்பட்டு மாவட்டத்தில் - 46.3 சதவீதம்,  விழுப்புரம் மாவட்டத்தில் - 61.04 சதவீதம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 53.27 சதவீதம், திருப்பத்தூர் மாவட்டத்தில் - 41.24 சதவீதம்,  தென்காசி மாவட்டத்தில் 55.29 சதவீதம், நெல்லை மாவட்டத்தில் 52.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து