முக்கிய செய்திகள்

மறைந்த கால்பந்து வீரர் மரடோனா மீது அவரது தோழி பாலியல் புகார்

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      உலகம்
Mavis-Alvarez 2021 11 23

Source: provided

பியூனஸ் ஏர்ஸ் : மறைந்த கால்பந்து வீரர் மரடோனாவின் முன்னாள் தோழி அவர் மீது பாலியல் பலாத்கார  குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவருடன் தான் கியூபாவில் உள்ள ஹவானாவில் இருக்கும் புகைப்படத்தையும்  அவர் வெளியிட்டுள்ளார்.

கியூபா நாட்டை சேர்ந்த பெண்ணான மேவிஸ் ஆல்வாரெஸ் அர்ஜெண்டினா நாட்டு கோர்ட்டில்  கடத்தல் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.  அதில் தன்னுடைய 16-ம் வயதில், மறைந்த கால்பந்து வீரர் மரடோனாவுடன் பழகி வந்ததாகவும்,  அந்நாட்களில், மரடோனா தன்னை கட்டாய பாலுறவுக்கு வற்புறுத்தியதாகவும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரத்தில் நேற்று முன்தினம்  செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் 37 வயதான அவர், கியூபாவில் நடந்த சம்பவங்களை பிடல் காஸ்ட்ரோவின் அரசாங்கமும் மரடோனாவின் நெருங்கிய கூட்டாளிகளும் மறைத்து விட்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.  

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கால்பந்து வீரர் மரடோனா இறந்து விட்ட நிலையில், அவருடைய நெருங்கிய கூட்டாளிகளான முன்னாள் மேலாளர் மற்றும் அர்ஜெண்டினாவை சேர்ந்த அவருடைய நண்பர்கள் சிலரிடம்  ஆல்வாரெசின் வழக்கறிஞர்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.  ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மரடோனாவின் நெருங்கிய நட்பு வட்டாரம் மறுத்துள்ளது. 

மரடோனா தான் கொகைன் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்காக கியூபாவில் சில வருடங்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின், நவம்பர் 2001-ம் ஆண்டு மரடோனா அர்ஜெண்டினாவுக்கு பயணித்துள்ளார். அவருடன் சேர்ந்து ஆல்வாரெசும் அர்ஜெண்டினாவுக்கு பயணித்துள்ளார். அதன்பின், ஆல்வாரெஸ் அங்கு அழகுக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அர்ஜெண்டினா நாட்டு நீதிமன்றம் இதுவரை அவருடைய குற்றச்சாட்டு குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து