முக்கிய செய்திகள்

முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய நளினியின் மனு தள்ளுபடி

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் நளினி மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள் துறை செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென உரிமையாகக் கோர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், எழுவர் விடுதலை விவகாரம் கவர்னரின் பரிசீலனையில் இருப்பதாகவும், தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து கவர்னரிடம் விளக்கம் கேட்க முடியாது எனவும், ஆகவே, நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த நிலையில் நீதிபதிகள் சுப்பையா, நிர்மல் குமார் அடங்கிய அமர்வு நேற்று (ஆகஸ்ட் 29) தீர்ப்பு வழங்கியது. அப்போது, கவர்னரை நிர்பந்திக்க தமிழக அரசுக்கும் அதிகாரம் கிடையாது, நீதிமன்றத்துக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறி தமிழக அரசின் வாதத்தினை ஏற்று நளினியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 28 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில் கவர்னரே முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. எனினும், ஒன்றரை வருடமாகியும் இந்த விவகாரத்தில் கவர்னர் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து