முக்கிய செய்திகள்

ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை: மியான்மர் கோர்ட் உத்தரவு: உலக நாடுகள் கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      உலகம்
Aung-San-Suu-Kyi 2021 12 06

மியான்மரில் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மியான்மரில் நடைபெற்று வந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்து மக்களுக்காக போராடியவர் ஆங் சான் சூகி. பர்மாவின் காந்தி என்று உலக நாடுகளால் அழைக்கப்படுபவர். 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். 1992-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு விருதினை இவருக்கு வழங்கி இந்தியாவின் சார்பில் கவுரவிக்கப்பட்டது. 

இத்தகைய மாபெரும் மக்கள் தலைவராக கருதப்படும் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது  உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆங் சான் சூகி, கருத்து வேறுபாடுகளை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்றும் கொரோனா விதிகளை மீறி உள்ளார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் அவர் மறுத்துள்ளார்.  

மியான்மரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், பொதுத் தேர்தலில் வாக்காளர்களை மோசடி செய்ததாகக் கூறி இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.  மறுமுனையில்,  தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற்றதாக தேர்தல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை எல்லாம் பொருட்படுத்தாமல், மியான்மர் இராணுவம் அவரது ஆட்சியை கவிழ்த்தது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆங் சான் சூகியின் தலைமையிலான சிவில் அரசாங்கம் கவிழ்ந்தது. மேலும், பிப்ரவரி மாதம் முதல் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஆங் சான் சூகியுடன் சேர்த்து மியான்மரின் முன்னாள் அதிபரும், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியில் இருந்தவருமான வின் மைண்ட்க்கும் சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மலேசிய சட்டமன்ற உறுப்பினரும், மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவருமான சார்லஸ் சாண்டியாகொ, நீதிக்கு எதிராக நடைபெறும் கேலிக்கூத்து இது என்று தெரிவித்துள்ளார்.

76 வயதான  ஆங் சான் சூகியின் மீது ஊழல் வழக்குகள், அலுவல் ரீதியான ரகசிய சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மியான்மரின் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஆங் சான் சூகியை 104 ஆண்டுகள் சிறையில் அடைக்க இராணுவம் முடிவு செய்துள்ளது. அவர் சிறையில் வைத்து மரணம் அடைவதை அவர்கள் விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார்.

இராணுவ ஆட்சிக்குழுவால் கைது செய்யப்பட்ட 10,600-க்கும் மேற்பட்டவர்களில் ஆங் சான் சூகியும் ஒருவர் ஆவார். ஜனநாயகத்திற்கு ஆதரவான செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களை மியான்மர் இராணுவம் ஒடுக்கியது என்று அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து