முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கப்படும்: ஸ்டாலின் உறுதி

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.  

தருமபுரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தருமபுரி மாவட்டம் என்றாலே இரண்டு விஷயங்களை நாம் மறக்க முடியாது. ஒன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தருமபுரியில்தான் முதன்முதலாக தொடங்கப்பட்டது.  மற்றொன்று என்னவென்றால்,  என்னுடைய மேற்பார்வையில் நடந்த ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.  தருமபுரி மாவட்ட மக்கள் மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களும் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. அவர்களுக்கு கிடைக்கக் கூடிய குடிதண்ணீரில் ப்ளோரைடு அதிகமாக கலந்து இருந்தது.  குறிப்பாக பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும் பற்களில் காரை படிவதும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதில் இருந்து இந்த இரண்டு மாவட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். அந்த  சீரிய திட்டத்தை கடந்த 2008-ஆம் ஆண்டு தருமபுரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியே  நேரடியாக வந்து துவக்கி வைத்தார்.

இப்போது இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவை மேலும் உயர்த்தும் வகையில், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, சேலம் -  தருமபுரி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேலும் எளிதாக்கக் கூடிய வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டையூருக்கும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டனூருக்கும் இடையே புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை இணைப்பு உருவாக்கப்படும்.

அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தருமபுரியில் புதிய பால் பதனிடும் நிலையம் ஒன்று அமைக்கப்படும்.  புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக தருமபுரியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.  தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் அலுவலகக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படும்.

ஒரு மாநிலத்தில் ஏராளமான முதலீடுகள் பல்வேறு நிறுவனங்களால் செய்யப்படுகிறது என்றால் அந்த மாநிலத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று பொருள். முதலீடு என்பது வெறும் தொழில் சார்ந்தது மட்டுமல்ல, அது வளர்ச்சியை சார்ந்தது. நமது தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக நிச்சயமாக நாம் ஆக்குவோம்.  இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து