முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      ஆன்மிகம்
Chidambaram-Natarajar 2022-

Source: provided

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றினார்.

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை மேள தாளம் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதிட, தேவாரம், திருவாசகம் பாடி கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

இந்த உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று 28-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், நாளை 29-ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 30-ம் தேதி வெள்ளி பூதவாகனத்தில் சாமி வீதிஉலாவும், ஜூலை 1-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலாவும் (தெருவடைச்சான்), 2-ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 3-ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 4-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது. 

வரும்  5-ம் தேதி முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த்திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. ஜூலை 6-ம் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. 

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும்,ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 

வரும் 7-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!