முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
EPS-OPS 2022 06 30

Source: provided

சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 

இது குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதிக்கப்படுவதாகவும், அதற்கான தேர்தல் அறிவிப்பு செய்ய உள்ளதாகவும், அதுவரை இடைக்கால பொதுச் செயலர் பொறுப்பு உருவாக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ல் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுவில் இயற்றப்பட்ட, சட்ட திட்டத் திருத்தங்கள், ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதி பேர் உடனடியாக கூட்டுமாறு விண்ணப்பித்ததின் அடிப்படையில் வரும் 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டப்படுகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் தீர்மானங்கள்:

அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது, அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது, இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுப்பது,  இடைக்கால பொதுச் செயலாளரை, நடைபெற உள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுவது போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டுவது,  அதிமுக.,வின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டுவது,  எம்.ஜி.ஆர் வழியில், ஜெயலலிதாவின் ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செயல்பட்ட வரலாற்று வெற்றிகள் குறித்தும்,  அ.தி.மு.க. அரசின் மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்யும், தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது,  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய, மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது,  சட்டம், ஒழுங்கை பேணி காக்கத் தவறிய தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது,  மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்துவது,  இலங்கை தமிழர் நலன் காக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. அரசுக்கு வலியுறுத்துவது,  நெசவாளர்களின் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது,  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என 16 தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!