முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 இன்று முதல் வழங்க ஏற்பாடு : ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்தது. சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில், 44 செ.மீ. மழை பதிவானது. இதனால், மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் பகுதிகளில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கின. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், கடும்மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து