முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைக் சாகசத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின்படி கடந்த 5 ஆண்டுகளில் வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்கியது, வாகனங்களின் வடிவத்தையும், சைலன்சர்களை மாற்றியும் இயக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதுபோல வாகனங்களை வேகமாக இயக்குவது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல், பாதசாரிகளுக்கும், பிற வாகன ஓட்டுநர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. முறையாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதியைப் பெறாமல் வாகனங்களில் மாற்றங்கள் செய்து இயக்குவது விபத்துக்களுக்கு வழி வகுக்கிறது.

இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பை மாற்றி, அபாயகரமான வகையில் இயக்குவதை தடுக்கவும், வேகமாக வாகனங்கள் ஓட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து