முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் வரும் 23-ம் தேதி புறப்படுகிறது

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      ஆன்மிகம்
Sabarimala 2022 12 -09

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் வரும் 23-ம் தேதி புறப்படுகிறது. 

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இம்முறை கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. 

குறிப்பாக வார இறுதி நாட்களில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் தரிசனத்திற்கு வருகிறார்கள். நேற்று கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் நேற்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலுக்கு இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18-ம் படி ஏற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசை கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்தது. இதுபோல நெய்யபிஷேகம் செய்யவும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். 

இம்முறை ஏராளமான கன்னிசாமிகளும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் சரங்குத்தியில் திரண்டதால் அங்கும் கூட்டம் அலை மோதியது. சபரிமலை ஐயப்பனுக்கு இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 27-ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அதன்பின்பு பகல் 11 மணிக்கு களபாபிஷேகத்திற்கு பிறகு தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மண்டல பூஜை நடக்கிறது. இப்பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். 

அதன்பின்பு மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக சபரிமலை சன்னிதானம் எடுத்து செல்லப்படும். அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொண்டு செல்லப்படும் தங்க அங்கி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். 

இந்த ஊர்வலம் வருகிற 23-ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலம் 26-ம் தேதி பம்மை கணபதி கோவிலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து அன்று மாலை சன்னிதானம் கொண்டு செல்லப்படும். மறுநாள் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையின் போது தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து