முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் 2 முக்கிய கட்சியினர் இடையே மோதல் - கார்களுக்கு தீ : மாச்சலா நகரில் 144 தடை உத்தரவு

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2022      இந்தியா
Andhra 2022 12 17

Source: provided

ஐதராபாத் : ஆந்திராவில் 2 முக்கிய கட்சியினர் இடைய ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு கலவரக்காரர்கள் கார்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் மாச்சலா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் முழுவதும் பேரணி நடத்தி வருகின்றனர். பல்நாடு மாவட்டம் மாச்சர்லா ரிங் ரோட்டில் இருந்து நேற்று அந்த தொகுதி பொறுப்பாளர் ஜூல காந்தி பிரம்மா ரெட்டி என்பவரது தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் பேரணியாகச் சென்றனர்.

அப்போது ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பேரணியாக சென்றவர்கள் மீது கற்களை வீசினர். இதனால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது. மேலும் தயார் நிலையில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் உருட்டு கட்டைகளுடன் பேரணிக்குள் புகுந்து சரமாரியாக தாக்கினர். மாறி மாறி தாக்குதல் நடத்தியதால் அந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்தது.

உருட்டு கட்டைகள் இருந்ததால் ஓய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் ஓங்கியது. இதனால் தெலுங்கு தேசம் கட்சியினர் ஓட தொடங்கினர்.அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களை விரட்டி விரட்டி தாக்கினர். தொடர்ந்து இந்த பேரணிக்கு தலைமை தாங்கிய ஜுல காந்தி பிரம்மா ரெட்டியின் வீட்டிற்கு ஓய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் கும்பலாக சென்றனர். அவருடைய வீடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

இதனால் கார்கள் கொளுந்துவிட்டு எரிந்தது. கட்சி அலுவலகத்திலும் தீ வைக்கப்பட்டதால் அங்கிருந்த பொருட்கள் எரிந்தன.இதனை கண்ட பொதுமக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த தாக்குதல் நீடித்தது. இதனால் நகரம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.  தெலுங்குதேசம் கட்சி அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் கார்கள் தீ வைக்கப்பட்டது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தாமதமாக வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .அதற்குள் கார்கள், அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

இந்த கலவரம் தொடர்பாக 10 பேரை முதற்கட்டமாக போலீசார் கைது செய்தனர். மேலும் மாச்சலா நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்த நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆந்திராவில் இந்த சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து