முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் தொடரை போல நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடருமா..? முதல் டி-20 போட்டியில் இன்று மோதல்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      விளையாட்டு
26-Ram-50

Source: provided

ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் ஒருநாள் தொடரை போல இந்திய அணியின் வெற்றி தொடருமா என்ற ஆவல் மேலோங்கியுள்ளது.

ஒயிட்வாஷ் செய்தது...

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2- வது ஆட்டத்தில் 8 விக்கெட்டிலும், இந்தூரில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 90 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

ஹர்த்திக் கேப்டன்....

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (27-ம் தேதி) நடக்கிறது. ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான நம்பிக்கையுடன் விளையாடும். மேலும் கடந்த நவம்பர் நியூசிலாந்து பயணத்தின் போது 20 ஓவர் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

சூர்யகுமார் யாதவ்... 

20 ஓவர் போட்டியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் ஜொலிக்கிறார். அவர் அதிரடியாக ஆட ஆரம்பித்தால் கட்டுப்படுத்துவது கடினம். சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். உள்ளூர் போட்டியில் அசத்திய பிரித்விஷாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்து உள்ளது. பந்து வீச்சில் அர்தீப்சிங், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.

சீனயர்களுக்கு ஓய்வு...

ஒருநாள் தொடரில் இடம்பெற்ற கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஒருநாள் தொடரில் ஆடிய ஒரு சில வீரர்கள் மட்டுமே 20 ஓவர் அணியில் இடம் பெற்று உள்ளனர். நியூசிலாந்து 20 ஓவர் அணிக்கு சான்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஒருநாள் தொடரை மோசமாக இழந்த நியூசிலாந்து அணி அதற்கு 20 ஓவர் தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

23-வது போட்டி...

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இன்று மோதுவது 23-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை 22 போட்டியில் இந்தியா 12, நியூசிலாந்து 9-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. இன்றைய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து