Idhayam Matrimony

பரிசு பொருட்கள் முறைகேடு வழக்கு இம்ரான்கான் கோர்ட்டில் ஆஜர்

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      உலகம்
Imran-Khan 2023 02 17

பரிசு பொருட்கள் விற்பனை முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் நேற்று இஸ்லாமாபாத் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். 

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமராக இருந்த போது இம்ரான் கான் வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாத்து வரும் அரசு கருவூலமான தோஷகனாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்ரான்கான் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இம்ரான் கான் தாக்கல் செய்து இருந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த வழக்குகள் மட்டுமின்றி பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. 

இந்த 2 வழக்குகளிலும் இம்ரான் கானை தங்கள் முன்பு போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டு ஜாமீனில் வெளியில் வரமுடியாத கைது வாரண்டை சில நாட்களுக்கு முன்பு பிறப்பித்தது. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள வீட்டுக்கு போலீசார் சென்றனர். 

அப்போது போலீசாருக்கும், இம்ரான்கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி இம்ரான்கான் தரப்பில் தாக்கல் செய்து இருந்த மனுவை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு இந்த கைது உத்தரவை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் கைது நடவடிக்கையை கைவிட்டனர். 

இதற்கிடையில் நேற்று முன்தினம் இம்ரான் கான் லாகூர் ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார். அங்கு அவர் மீது தொடரப்பட்டுள்ள 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 

பரிசு பொருட்கள் விற்பனை முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் நேற்று இஸ்லாமாபாத் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இம்ரானை காண அவரது கட்சி தொண்டர்கள் கோர்ட்டு முன்பு திரண்டு இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து