முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.பியும் நடிகருமான இன்னசென்ட் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2023      சினிமா
Innocent 2023 03 27

Source: provided

திருவனந்தபுரம் : முன்னாள் எம்.பியும் நடிகருமான இன்னசென்டின் மரணத்திற்கு பிரதமர் மோடி, கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மலையாள சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் இன்னசென்ட் (75). 1972ல் நிருத்தசாலா என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இரகள், நெல்லு, கிலுக்கம் உள்பட 700க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன் வேடங்களில் நடித்துள்ளார்.பொன்முட்டையிடும் தாராவ், ராம்ஜிராவ் ஸ்பீக்கிங், வடக்குநோக்கியேந்திரம் மற்றும் மழவில்க்காவடி போன்ற படங்களின் மூலம் இன்னசென்ட் மலையாளத்தின் நகைச்சுவைப் பேரரசர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார்.

தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். மலையாள நடிகர் சங்கமான் அம்மாவில் 15 வருடத்திற்கு மேல் தொடர்ந்து தலைவராகவும் இருந்து உள்ளார். இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இன்னசென்ட்டுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.45 மணி அளவில் மரணமடைந்தார். 

நடிகர் இன்னசென்டின் மரணத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். நேற்று கொச்சி மற்றும் சாலக்குடியில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர் இன்னசென்டின் இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த ஊரான சாலக்குடியில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.

இன்னசென்ட்டின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளா். பார்வையாளர்களின் இதயங்களை நகைச்சுவையால் நிரப்பிய இன்னசென்ட் என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் கூறி உள்ளார் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் பிரதமர் அலுவலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து