முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடிசோதனை : தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு - எஸ்.பி. விளக்கம்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      தமிழகம்
Income-tax 2023-05-26

Source: provided

கரூர் : கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீடு, அவரது நிறுவனம் மட்டும்,  அவருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று காலை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தி.மு.க.வினர் திரண்டதால் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை, கரூர், கோவை, தெலுங்கானா, பாலக்காடு, பெங்களூரு என மூன்று மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று  ஒரே நேரத்தில் சோதனையை நடத்தினர்.  கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்களான துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு மெஸ் மணி வீடுகள் உள்பட 10 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை சோதனையை நடத்தினர்.

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு. அங்கு வந்த வருமான வரித் துறையினர் வீடு பூட்டியிருந்ததால் மெயின் கேட்டைத் திறந்து உள்ளே சென்றனர். ஆனால், அதற்குள் அங்கே தி.மு.க.வினர் திரண்டுவிட்டனர். வருமான வரித் துறை பெண் அதிகாரி ஒருவர் சோதனை நடத்த முயன்ற போது, அவரிடம் அங்கு குழுமியிருந்த தி.மு.க.வினர் அடையாள அட்டையை காண்பிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் அதிகாரிக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தி.மு.க. தொண்டர் குமார் என்பவரை பெண் அதிகாரி தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பொழுது குமாருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்த தி.மு.க. தொண்டர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தி.மு.க. தொண்டர் குமாரை தாக்கியதாக பெண் அதிகாரியை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் பெண் அதிகாரி வந்த காரை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கரூர் நகர காவல் நிலையத்தினர் சம்பவத்துக்கு வந்து பெண் அதிகாரியை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பெண் அதிகாரியை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் வருமான வரித் துறையினர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு ரியர் மிரர் சேதப்படுத்தப்படும் காட்சிகளும், ஒப்பந்ததாரர் ஒருவர் வீட்டில் சுற்றுச் சுவரில் ஏறிக் குதித்து அதிகாரிகள் உள்ளே சென்ற காட்சியும் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

கரூர் எஸ்.பி. விளக்கம்: 

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில்,  வழக்கமாக ரெய்டு செல்வதற்கு முன்னதாக வருமான வரித் துறையிடமிருந்து தகவல் வரும். ஆனால், அப்படியேதும் வராததால் இந்த முறை பாதுகாப்பிற்கு போலீசாரை அனுப்பிவைக்க முடியவில்லை என்று தெரிவித்தார். 

அதை தொடர்ந்து காவல் நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், வருமான வரித் துறை அதிகாரிகளுடன் காவல் துறையினரும் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், மாவட்ட எஸ்.பி.யும் அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றார். கரூரில் ரெய்டு நடக்கும் பகுதிகளில் அதிரடிப்படையினரும் சென்றனர். இந்த நிலையில் தி.மு.க.வினர் தாக்கியதாகக் கூறி வருமான வரித் துறை அதிகாரிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தி.மு.க. கண்டனம்: 

இந்த வருமான வரி சோதனை பா.ஜ.க.வின் மிகக் கேவலமான அரசியல் என்று தி.மு.க. கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை சோதனை நடப்பது பா.ஜ.க.வின் மிகக் கேவலமான அரசியல். செந்தில்பாலாஜியை முடக்க வேண்டும் என்பது அண்ணாமலையின் திட்டம் என்று கூறினார். 

அமைச்சர் விளக்கம்: 

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, இதுபோன்ற சோதனைகளை நாங்கள் புதிதாக எதிர்கொள்ளவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் இவ்வாறாக சோதனை நடைபெற்றது. தற்போது இச்சோதனை எனது இல்லத்தில் நடக்கவில்லை, எனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடந்தது.  விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததையடுத்து கரூருக்கு தொடர்பு கொண்டு கட்சியினர் யாரும் சோதனை நடக்கும் இடங்களில் இருக்கக் கூடாது. சோதனை நடத்துபவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து