முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறு, குறு தொழில் நிறுவனங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சென்னை : சிறு, குறு தொழில் நிறுவனங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழக மக்களின் முதுகெலும்பு வேளாண்மை என்றால், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயிர் மூச்சு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களாகும். தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.

தற்போது தி.மு.க  ஆட்சியில் பொருளாதார மந்தநிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு  என அல்லாடிக் கொண்டிருந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள், தற்போது இரண்டாம் மின்கட்டண உயர்வு, மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றால் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. 

தாள முடியாத மின் கட்டண உயர்வால், பொருட்களின் அடக்க விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், இந்த விலை உயர்வு மக்களின் தலையில்தான் விழுகிறது என்றும், இதனால், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதன் காரணமாக தமிழகமெங்கும் சுமார் 25 சதவீத தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக போராட்டம் நடத்திவரும் தொழில் முனைவோர் நிர்வாகிகள் கூறியுள்ளனர். 

இந்நிலையில், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர்  மு.க.ஸ்டாலின், கடுமையான மின்கட்டண உயர்வையும், அதனால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசாமல் திருப்பூர் டல் சிட்டி ஆக மாறி விட்டது என்று விமர்சித்துள்ளார். 

எனவே, உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பப் பெற்று, தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை மீண்டும் உச்சம் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து