முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவிலும் காலை உணவுத்திட்டம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : இந்தியாவில் மட்டுமல்ல, கனடாவிலும் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமாக தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் வெகுசிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 7.5.2022 அன்று விதி 110-ன் கீழ், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது என்றும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம், படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.” என்றும் அறிவித்தார்.

இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் இந்தக் காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே, தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நமது முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் நேற்று (2.4.2024) “கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து