முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Ramar 2024-04-17

Source: provided

அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின்  நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பிரதமர் மோடி தனது டேப்லெட் மூலம் கண்டு தரிசித்தார். 

பகவான் ஸ்ரீ ராமரின் அவதாரத் திருநாளான நேற்று ராம நவமி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

அயோத்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் பால ராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் நேற்று நடைபெற்றது. 

நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது. 

நெற்றித் திலகத்தின் அளவு 58 மி.மீ. அளவுக்கு இருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வை அயோத்தியில் உள்ள பக்தர்கள் தெளிவாக காணும் வகையில் நகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. 

அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக நுழைய வழி இல்லை. இதனால், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் அடங்கிய ஒரு விரிவான வடிவமைப்பு மூலம் பால ராமருக்கு சூரிய திலகம் நிகழ்வை நிகழ்த்தி உள்ளனர். 

மூன்றாவது தளத்தில் இருந்து சூரிய ஒளிக்கதிர், கருவறையில் இருக்கும் பால ராமரின் நெற்றியில் சரியாக விழும் வகையில் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியன் வானியற்பியல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த அமைப்பை உருவாக்கி உள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரியனின் கதிர்களை துல்லியமாக விழச் செய்யும் வகையில் ஆப்டோ மெக்கானிக்கல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனின் திசையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களில் சிறிய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். 

அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ராம நவமி விழா மற்றும் முதல் சூரிய திலகம் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. ராம நவமியை முன்னிட்டு, பால ராமர் மஞ்சள் நிற ஆடை அலங்காரத்தில் காட்சியளித்தார். ராமருக்கு 56 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டன.   

இந்நிலையில், அசாமில் நல்பாரி பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தனது டேப்லெட் மூலம் ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ  நிகழ்வை கண்டுகளித்தார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

எனது நல்பாரி பேரணிக்குப் பிறகு, ராம் லல்லாவில் சூர்ய திலகத்தை பார்த்தேன். கோடிக்கணக்கான இந்தியர்களை போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். 

அயோத்தியில் பிரம்மாண்டமான ராம நவமி வரலாற்று சிறப்புமிக்கது இந்த சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும். மேலும், இது நமது தேசத்தை பெருமையின் புதிய உயரங்களை அடைய ஊக்குவிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து