முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி பயிற்சியாளர் பதவி விவகாரம்:ஆஸி., வீரர்களை அணுகினோமா..?பி.சி.சி.ஐ. செயலர் ஜெய்ஷா மறுப்பு

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      விளையாட்டு
24-Ram-50

Source: provided

மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்காக எந்த ஆஸ்திரேலிய வீரர்களையும் அணுகவில்லை என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

பாண்டிங் - லாங்கர்...

முன்னதாக, இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை நிராகரித்ததாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்த நிலையில், 'பி.சி.சி.ஐ. ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பாக அணுகவில்லை' என்று ஜெய் ஷா கூறியுள்ளார். மேலும், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் தொடர்பாக பேசிய ஜெய் ஷா, "நானோ, பி.சி.சி.ஐ.யோ எந்த ஆஸ்திரேலிய வீரர்களையும் பயிற்சியாளர் வாய்ப்புக்காக அணுகவில்லை. இது தொடர்பாக வெளிவரும் செய்திகள் தவறானவை.

மிகுந்த கவனமிக்க... 

இந்திய அணிக்கு சரியான பயிற்சியாளரை கண்டுபிடிப்பது என்பது மிகுந்த கவனமிக்க செயல்முறை. இந்திய கிரிக்கெட் கட்டமைப்பை பற்றிய ஆழமான புரிதல் கொண்ட நபரை அடையாளம் காண்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். பி.சி.சி.ஐ. நடத்தும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ஆழ்ந்த அறிவு கொண்டிருக்க வேண்டும் என்பதே அடுத்த பயிற்சியாளர் தேர்வுக்கு நாங்கள் வைத்திருக்கும் அளவுகோல்.

கவுரவமான பதவி...

இந்திய அணியை உண்மையாகவே அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல இந்த புரிதல் மிகவும் உதவிகரமாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியைவிட வேறு கவுரவமான பதவி இருக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணி உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணி. இந்திய ரசிகர்களின் கிரிக்கெட் மீதான ஆர்வம், அதனை வணிகம் செழிக்கக்கூடிய விளையாட்டாக மாற்றியுள்ளது. ஒரு பில்லியன் ரசிகர்களின் கனவுகளை நிறைவேற்றக் கூடிய பணி என்பதால், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியான நபரை பி.சி.சி.ஐ. தேர்ந்தெடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியராகவே... 

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் கட்டமைப்பை பற்றிய ஆழமான புரிதல் கொண்ட நபர் தான் அடுத்த பயிற்சியாளர் என்று ஜெய் ஷா கூறியிருப்பதால் அநேகமாக அடுத்த பயிற்சியாளரும் இந்தியராகவே இருக்கக்கூடும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் பேசிவருகின்றனர்.

பரிசீலனையில்... 

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.). இந்த முறை வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வாரியம் தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த பொறுப்பை கவனிக்க சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டவர்களின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

கவனிக்க வேண்டும்... 

அதற்கேற்ப, இது குறித்து ரிக்கி பாண்டிங் ஐசிசி நேர்காணலில் பேசும்போது, “எனது ஆர்வம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஐபிஎல் சீசனின் போது இது தொடர்பாக சிறிய அளவிலான உரையாடல் நடந்தது. எனக்கும் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை கவனிக்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளது.ஆனால், எனது வாழ்வில் உள்ள சில விஷயங்களை நான் கவனிக்க வேண்டும். அதில் எனது குடும்பமும் அடங்கும். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கவனித்தால் ஐபிஎல் அணியுடன் இருக்க முடியாது. இது அனைவரும் அறிந்ததே. அதேபோல தேசிய அணியின் பயிற்சியாளர் என்றால் ஆண்டுக்கு 10 அல்லது 11 மாத காலம் பணியாற்ற வேண்டி இருக்கும்.

அவர் நேசிக்கிறார்...

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு வந்துள்ளதாக எனது மகனிடம் சொன்னேன். அவர் அதை ஏற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார். அந்த அளவுக்கு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் கிரிக்கெட்டை அவர் நேசிக்கிறார். ஆனாலும் இப்போதைக்கு எனது லைஃப்ஸ்டைலுக்கு அது செட் ஆகாது” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து