முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பா.ஜ.க. அரசு மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு பரிசாக கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வழங்கியுள்ளது: திருமங்கலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      தமிழகம்
CM-2-2026-03-07

திருமங்கலம், உண்மையில் பா.ஜ.க. யாருக்கும் நல்லது செய்யாது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் தினத்தை முன்னிட்டு சிலிண்டர் விலையை  60 ரூபாய் உயர்த்தி மகளிருக்கு பரிசு அளித்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வரவேற்கிறேன்...

மதுரை திருமங்கலத்தில் ஓ.பி.எஸ். தலைமையில் 50 ஆயிரம் பேர் தாய் கழகத்தில் இணையும் இணைப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; இந்த மேடை மிக வித்தியாசமான மேடை. சில காலம் முன்பு வரை ஓ.பி.எஸ்., இந்த மேடையில் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்து இருக்கமாட்டார். ஆனால் லேட்டாக இருந்தாலும் எம்.ஜி.ஆர். இருந்த தாய் கழகமான தி.மு.க.வுக்கு திரும்பி இருக்கிறார். அவரையும், அவருடன் இணைந்தவர்களையும் தி.மு.க. தலைமை தொண்டனாக நான் வரவேற்கிறேன். எம்.ஜி.ஆருக்கு நானும் ரசிகன் தான். கழகத்தை அவர் வளர்த்தார், கழகமும் அவரை வளர்த்தது. அப்படிப்பட்ட தாய்கழகத்திற்கு நீங்கள் எல்லாரும் திரும்பி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட அ.தி.மு.க. யாருக்கோ அடிமை சேவகம் செய்ய போனதால் உரிமைக்குரல் எழுப்பி தாய் கழகத்திற்கு திரும்பி உள்ளீர்கள்.

அறிவாலயத்திற்கு... 

அண்ணாதுரை பெயரை தாங்கிய இயக்கம், அவரையும், அவரின் கொள்கையையும் மறந்து, அண்ணாதுரை தொடங்கிய இயக்கத்திற்கு நீங்கள் எல்லாம் வந்துள்ளீர்கள். சுயமரியாதை கோட்டையான அறிவாலயத்திற்கு வந்துள்ளீர்கள். உங்களை எல்லாம் வரவேற்கிறேன். ஓ.பி.எஸ். எப்போதுமே சிரித்த முகமாக தான் இருப்பார். அது தான்அவரின் பண்பு. ஓ.பி.எஸ்.சை பார்க்கும் போது அமைதியும், புன்னகையும் மட்டுமல்ல நினைவுக்கு வருவது விசுவாசம். ஆனால் துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர் தான் இ.பி.எஸ். கூவத்தூர் சம்பவம் மூலம் முதல்வர் பதவி வாங்கிவிட்டு, அந்த பதவியை தந்த சசிகலாவையே ஒருமையில் பேசியவர் தான் இந்த இபிஎஸ்.

எதுவும் செய்வார்... 

இ.பி.எஸ்.சை பொறுத்தவரையில் தன்னை காப்பாற்றிக் கொள்ள எதுவும் செய்வார். அவரின் உச்சக்கட்ட துரோகம் என்ன தெரியுமா? எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்திருக்கிறார். பா.ஜ.க. தமக்கு நல்லது செய்யும் என்று இ.பி.எஸ். இன்றைக்கு நினைக்கிறார். உண்மையில் பா.ஜ.க. யாருக்கும் நல்லது செய்யாது. இன்றைக்கு  (நேற்று) கூட சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தி மகளிருக்கு பரிசு அளித்துள்ளனர். 2024ம் ஆண்டு 100 ரூபாய் குறைத்தது தேர்தலுக்கான பம்மாத்து என்று பிரதமர் மோடி நிரூபித்து இருக்கிறார். இன்றைக்கு அந்த பெண் சக்தி அவரின் கண்களுக்கு தெரியவில்லையா?

உயர்த்துவோம்... 

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக கூறி ஒட்டுத்திருட்டு மாதிரி அவர்களின் பணத்தையும் பறிப்பது நியாயமா? 2024ல் பெண்களின் நல்வாழ்வுக்காக காண்பித்த போலி அக்கறை, 2026ல் எங்கே போனது, பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய விடமாட்டார்கள். இதை உணர்ந்ததால் தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகை முடக்க நினைத்த சதியை முறியடித்து ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு 5000 ரூபாய் வழங்கி இருக்கிறோம். அடுத்து வரப்போகும் ஆட்சியில் இந்த தொகையை ரூ.2000 ஆக உயர்த்துவோம் என்று அறிவித்து உள்ளோம். மக்களுக்கு எல்லாவற்றையும் தந்தால் அது தி.மு.க..

பா.ஜ.க. பந்தாடியது...

மக்களை பற்றி கவலைப்படாமல் அவர்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தால் அது பாஜக. இப்படி யாருக்கும் நன்மை செய்யாத பா.ஜ.க.வா அ.தி.மு.க.வுக்கு நன்மை செய்ய போகிறது? அ.தி.மு.க. ரத்தத்தை தான் உறிஞ்சி எடுக்கும். அதுதான் நடக்க போகிறது. இதில் இ.பி.எஸ்.சுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் பீகாரில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். 10 முறை முதல்வராக இருந்த நிதிஷ்குமாரை பா.ஜ.க. பந்தாடியது. இத்தனைக்கும் கடந்த நவம்பரில் தான் தேர்தல் நடந்து அவர் முதல்வர் ஆனார். அதற்குள்ளாக அவர் பதவி விலகுகிறார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. பா.ஜ.க. சார்பில் புதிய முதல்வர் பொறுப்பேற்க இருக்கிறார் என்று ஆதாரத்துடன் தகவல்கள் வருகிறது.

தூக்கி விடுவார்கள்....

இன்றைக்கு நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட கதி தான், நாளைக்கு இ.பி.எஸ்.க்கு நடக்கும். அதற்கு அவர் வெற்றி பெற வேண்டும் அல்லவா? என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. எனக்கு கிடைத்த தகவல்படி, அதி.மு.க.வில் இ.பி.எஸ்.சுக்கு பதிலாக வேறு ஒருவரை பொதுச் செயலாளராக பா.ஜ.க. தேர்ந்து எடுத்து வைத்துள்ளது. இ.பி.எஸ்.சை இந்த தேர்தல் வரைக்கும் தான் பா.ஜ.க. வைத்திருக்கும். அதன் பிறகு அவரை தூக்கி விடுவார்கள். அதுதான் நடக்க போகிறது. ஒருவேளை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்பவே அவரை மாற்றி இருப்பார்கள். அந்தளவுக்கு அ.தி.மு.க. பா.ஜ.க. கண்ட்ரோலுக்கு போய்விட்டது.

மாற்றி விடுவார்கள்.... 

அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுகளை வாங்கி தன்னை வளர்த்துக் கொள்ள பா.ஜ.க. போட்டிருக்கும் திட்டத்திற்கு இ.பி.எஸ். துணை போயிருக்கிறார். என்.டி.ஏ. சார்பில் இப்போது நடைபெறும் தேர்தல் கூட்டங்களை கவனித்தால் நன்றாக தெரியும். அ.தி.மு.க. கூட்டணி என்று சொல்ல மாட்டார்கள், என்.டி.ஏ. கூட்டணி தான் என்று சொல்வார்கள். பிரதமர் மோடியே சொல்லமாட்டார். இரண்டு விரல் காட்டும் செய்கையையும் மாற்றி விடுவார்கள். இதை எல்லாம் கவனித்தால் மஹாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்தது போல், பீகாரில் நிதிஷ்குமாருக்கு நடப்பது போல தமிழகத்தில் இ.பி.எஸ்.சுக்கு நடக்க போகிறது. இதை எல்லாம் முன் கூட்டியே கணித்த காரணத்தால் தான் அ.தி.மு.க. உண்மை தொண்டர்கள் தாய் கழகமான தி.மு.க.வுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

கூடுதலாக பலம்... 

 

2021 தேர்தலில் இருந்தததை விட நாம் இப்போது கூடுதலாக பலம் பெற்றுள்ளோம். அதனால் தான் வெல்வோம் 200 என்று என்னால் தைரியமாக சொல்ல முடிகிறது. நான் உறுதியாக சொல்கிறேன், தி.மு.க. கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம். தி.மு.க. தான் வெற்றி பெறபோகிறது என்று பா.ஜ.க.வே நினைக்கிறது. அதனால் தான் நமது பிரசார பீரங்கியாக இருந்த கவர்னரை மாற்றி இருக்கிறது. ஸ்டாலினுக்கு மறுபடியும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே என்ற விரக்தியில் அவர் கிளம்பிவிட்டார். கவர்னரை மாற்றாதீர்கள் என்று எத்தனை முறை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். இதில் கூட எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டீர்களா? வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையாக உழையுங்கள். இவ்வாறு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து