முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜஸ்வந்த்சிங் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.7 - குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் வேட்பாளரான ஜஸ்வந்த் சிங்கை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்று  தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங்  முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்து ஆதரவு கோர   நேற்று  சென்னை  வந்தார். 

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவதால் நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீண்டும் போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், அன்சாரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். 

இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவை பெறுவதற்காக ஜஸ்வந்த் சிங் நேற்று  சென்னை  வந்தார். முன்னதாக கோடநாட்டிலிருந்து,விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா சென்னை வந்தார். அவரை அமைச்சர்கள், எம்.பி.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். சென்னை வந்த ஜஸ்வந்த் சிங், பிற்பகலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை  சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவைக் கோரினார். இந்த சந்திப்பு பிற்பகல் 3.30 முதல் 3.45 வரை சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.  

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, நேரில் சந்திப்பதற்கும் கேட்டுக் கொண்டார்.  ஜஸ்வந்த் சிங்கை 1984 ஆம் ஆண்டு முதலே, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு தெரியும். இருவரும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றியுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர்.  ஜஸ்வந்த் சிங், நேற்று (6.8.2012) அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை, நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, ஜஸ்வந்த் சிங்குக்கு, அ.தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்று தெரிவித்துக் கொண்டார். இதற்கு ஜஸ்வந்த் சிங்  தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். 

இந்தச் சந்திப்பின் போது அ.தி.மு.க. பொருளாளரும், நிதி அமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும், அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டாக்டர் மு. தம்பிதுரை, பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய பின்னர் முதல்வரின் இல்லத்திலிருந்து வெளியே வந்த ஜஸ்வந்த்சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நிர்வாகத் திறமையற்றது என்பது நிரூபணமாகிவிட்டது. இதனால் இந்தியா கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் பிரச்சினையை காங்கிரஸ் கட்சியால் தீர்க்க முடியவில்லை. ஆகையால் அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் என்னை  அ.தி.மு.க. ஆதரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.     

ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனை வரவேற்கும் விதமாக ஜஸ்வந்த் சிங்குக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

ஜஸ்வந்த்சிங்குடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:-

நண்பர் ஜஸ்வந்த்சிங் 28 ஆண்டு கால நண்பர். தனிப்பட்ட முறையில் அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால் அதனை வரவேற்கும் விதமாக துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த்சிங்கை அ.தி.மு.க. ஆதரிக்கும். ஜஸ்வந்த் சிங் மக்களவையில் சிறப்பாக பணியாற்றினார். அதனால் அவரை ஆதரிக்க அ.தி.மு.க. முன்வந்தது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார். 

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- 

(ஆச்ஞ் சடீசூஙூ)

அ.தி.மு.க. தலைமை நிலையயம் அறிவிப்பு

 அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவின், முக்கிய அறிவிப்பு:-

இன்று (7.8.2012) நடைபெற உள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும்  ஜஸ்வந்த் சிங்-க்கு, அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்